பிரதமர் மோதி அறிவித்த 15 லட்சம் ரூபாய் வந்துவிட்டதாக மோசடி: எச்சரிக்கும் காவல்துறை

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

பிரதமர் அறிவித்த ரூ.15 லட்சம் பணம் வந்திருப்பதாகக் கூறி வங்கி கணக்குகளில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி போலீஸார் எச்சரித்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

"வங்கியில் இருந்து பேசுகிறேன். சுவிஸ் வங்கிகளில் இருந்து மீட்கப்பட்ட பணத்தை பொதுமக்களுக்கு பிரித்து கொடுக்கும் பணி நடந்து வருகிறது. பிரதமர் அறிவித்தபடி ஒவ்வொரு நபருக்கும் ரூ.15 லட்சம் கொடுக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக ரூ.25 ஆயிரம் உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பப்படும். அதற்காக உங்கள் வங்கி கணக்கு விவரங்களை கூறுங்கள்" என பேசுகின்றனர்.

பலர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். எனவே இதுபோன்ற போலியான அழைப்புகளை நம்பி யாரும் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர் என விவரிக்கிறது அச்செய்தி.

தினத்தந்தி - இரண்டாக பிரிகிறது அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நேற்று நிறைவேறியது என்கிறது இந்து தமிழ் திசையின் செய்தி.

தமிழக சட்டசபையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அண்ணா பல்கலைக்கழக சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தார்.

இணைவு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை சிறந்த முறையில் கண்காணிப்பதற்கும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர்கல்வி, ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக புதிய இணைவு வகை பல்கலைக்கழகத்தை, இணைவு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொண்டுள்ள, 'அண்ணா பல்கலைக்கழகம்' என்ற பெயரில் சென்னையில் தோற்றுவிக்கவும்,

தற்போதுள்ள பல்கலைக்கழகத்தை, 'அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்' என்ற பெயரில் ஒருமை வகை பல்கலைக்கழகமாக மாற்றி அமைக்கவும் அரசு தீர்மானித்துள்ளது. அதற்கு வழிவகை செய்ய இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டது. என்று விவரிக்கிறது அச்செய்தி.

தினமணி - `தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான்` - முதல்வர்

தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் இருமொழிக் கொள்கையிலிருந்து பின்வாங்க மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் என்கிறது தினமணியின் செய்தி.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் கூறினார். ஆனால், சுகாதாரத் துறையின் சார்பில் சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் தாவரங்களின் பெயர்கள் எல்லாம் ஹிந்தியில் வரிசைப்படுத்திப் போடப்பட்டுள்ளன. இது மும்மொழித் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமைந்திருக்கிறதா, இல்லையா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பின் அதற்கு அமைச்சர் பதிலளித்தனர்.

அதன்பின் பேசிய முதலமைச்சர், "எங்களுடைய கொள்கை இருமொழிக் கொள்கை. அதில் இருந்து பின்வாங்க மாட்டோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. அண்ணா எதிர்த்தார். அதைத் தொடர்ந்து இருமொழிக் கொள்கைக்கு நேரு உறுதி கொடுத்தார். அதிமுகவும் சரி, அரசும் சரி இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம்." என தெரிவித்தார் என விவரிக்கிறது அச்செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :