சுஷாந்த் சிங் வழக்கு: போதைப் பொருள் தடுப்பு பிரிவு ரியா வீட்டில் சோதனை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணையின் ஒரு கட்டமாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்று சுஷாந்தின் பெண் தோழி ரியா சக்ரர்த்தியின் மும்பை வீட்டை சோதனையிடுகிறது.

ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் அஷிவிக் சக்ரபோர்த்தி மற்றும் சுஷாந் வீட்டின் முன்னாள் பராமரிப்பாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோர் வீடுகளையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் விசாரணை குழுவினர் சோதனையிட்டு வருகின்றனர் என ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

“இது வழக்கமான ஒரு நடைமுறைதான். ரியா மற்றும் சாமுவேல் மிராண்டா வீடுகளில் இது நடைபெற்று வருகிறது” என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுஷாந்தின் வீட்டின் முன்னாள் பராமரிப்பாளர் சாமுவேல் மிராண்டா வீட்டை சோதனை செய்த, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் மும்பை போலீசார் சாமுவேலை அழைத்து சென்றுள்ளனர்

ரியாவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகைகள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக தொலைக்காட்சி சேனல்கள் பல்வேறு கோணங்களில் விவாதித்து வருவதும், அவரது தோழி ரியா சக்ரபோர்த்திதான் குற்றவாளி என்பது போல் பேசி வருவதையும் பலர் கண்டித்துள்ளனர்.

எனவே ரியா சக்ரபோர்த்திக்கு ஆதரவாக நடிகை வித்யா பாலன், டாப்சி, ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் பேசியுள்ளனர்.

" ஒரு பெண்ணாக ரியா சக்ரபொர்த்தியை இழிவுபடுத்துவதை பார்க்கும்போது எனது இதயம் சுக்குநூறாகிறது. குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதியாக இருக்க வேண்டாமா அல்லது நிரபராதியாக நிரூபிக்கப்படும்வரை குற்றவாளியாக இப்போது கருதப்படுகிறதா? குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்காவது நாம் சிறிது மதிப்பளித்து சட்டம் அதன் கடமையை செய்ய அனுமதிப்போம்" என்று வித்யா பாலன் கூறியிருந்தார்.

இது தொடர்பாக நடிகை லக்ஷ்மி மஞ்சு தமது டிவிட்டர் பக்கத்தில் "ரியாவுக்கு எதிரான இழிவுபடுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த திரைத்துறை விழித்தெழ வேண்டும்" என கூறியிருந்தார்.

மற்றொரு பிரபல நடிகையும் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்தவருமான டாப்சீ பன்னு, "எனக்கு சுஷாந்தையோ ரியாவையோ தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால், எனக்கு ஒன்று தெரியும். அது நீதித்துறையை முந்திக்கொண்டு ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படும் முன்பே அவரை குற்றவாளியாக்கப்படுவதை புரிந்து கொள்ள மனிதம் மட்டுமே தேவை. உங்களுடைய புனிதத்துக்காகவும் இறந்தவரின் புனிதத்துக்காகவும் சட்டத்தை நம்புங்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்திருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தனது வீட்டில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்திருந்தார்.

சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பாக மும்பை நகர காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் பிகார் காவல்துறை பதிவு செய்த வழக்கை அம்மாநில அரசு மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டது.

அதை உச்ச நீதிமன்றமும் பின்னர் உறுதிசெய்தது.

முன்னதாக, சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியும் பாலிவுட் நடிகையுமான ரியா சக்ரபொர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

சுஷாந்த் சாவில் மர்மம் உள்ளதாகவும் அவரது பணத்தை அவரது முன்னாள் தோழி ரியா அபகரித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் ஊடகங்களால் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் புகார் தொடர்பாக ரியா சக்ரவர்த்தி சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். பின்னர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் இரு தினங்களுக்கு முன்பாக, தனியார் தொலைக்காட்சிக்கு அவர் சிறப்பு நேர்காணல் அளித்த நிலையில் சுஷாந்த் சிங் மரணம் மற்றும் ரியாவுக்கு நீதி கேட்டு சமூக ஊடகங்களில் திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: