You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 10 தீவிரவாதிகள், 2 காவல் படையினர் பலி - கள நிலவரம்
- எழுதியவர், மஜீத் ஜஹாங்கிர்
- பதவி, பிபிசி இந்தி, ஸ்ரீநகரில் இருந்து
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியான பந்தா சௌக் எனும் பகுதியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் நடந்த துப்பாக்கி சூட்டில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இந்திய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ஒரு துணை கூடுதல் ஆய்வாளர் ஒருவரும் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இவற்றில் இரண்டு சம்பவங்கள் தெற்கு காஷ்மீரில் உள்ள சோஃபியான் மற்றும் புல்வாமா மாவட்டங்களிலும், மூன்றாவது சம்பவம் ஸ்ரீநகர் மாவட்டத்திலும் நிகழ்ந்துள்ளது.
சோஃபியான் மற்றும் புல்வாமா ஆகிய பகுதிகளில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் ஏழு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று தீவிரவாதிகள், இந்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் ஆகியோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதன் பின்பு பந்தா சௌக் பகுதியில் காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியதாகவும் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்போது மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
'தீவிரவாதி சரண்' - காவல்துறை இயக்குநர்
சோஃபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தீவிரவாதி ஒருவர் சரணடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோஃபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறப்புப் படை அதிகாரி பாபுராம், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் நீண்டகாலமாக பணியாற்றி வந்தவர் என்று ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் இயக்குனர் தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் காணொளி ஒன்றில் சுபைர் அகமது என காவல் படையினரால் அடையாளம் காணப்பட்டுள்ள, தீவிரவாதி என்று இந்திய பாதுகாப்பு படையினரால் கூறப்படும் நபரின் தாய் காவல் வாகனத்தில் அமர்ந்து கொண்டு ஒலிபெருக்கி ஒன்றின் மூலமாக அவரைச் சரணடைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த இன்னொரு ராணுவ அதிகாரியின் பெயர் பிரசாந்த் என்றும் அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சோஃபியான் மற்றும் புல்வாமா சம்பவங்களில் உயிரிழந்த ஏழு பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மற்றும் காஷ்மீரில் உள்ள இந்திய தேசத்திற்கு எதிரான மனநிலை உடையவர்களால் தவறாக வழிகாட்டப்பட்டு 2020ஆம் ஆண்டு தீவிரவாதிகளாக சேர்க்கப்பட்டவர்கள் என்று ஜம்மு-காஷ்மீரின் காவல்படை அதிகாரி ஏ. சென்குப்தா என்பவர் தெரிவித்துள்ளார் என ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
'காஷ்மீரில் தீவிரவாதிகளான 80 இளைஞர்கள்'
இந்த ஆண்டு மட்டும் காஷ்மீரில் 80 இளைஞர்கள் தீவிரவாத குழுக்களில் சேர்ந்துள்ளனர் என்று சனிக்கிழமை அன்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரின் தெற்கு பகுதியிலிருந்து பெரும்பாலான இளைஞர்கள் சமீப ஆண்டுகளில் தீவிரவாத குழுக்களில் சேர்ந்து வருகிறார்கள்.
கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும்பாலும் தெற்கு காஷ்மீர் பகுதியிலேயே நிகழ்ந்துள்ளன. எனினும் காஷ்மீரின் வடக்குப் பகுதியில் பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து தீவிரவாத குழுக்கள் தாக்கிய சம்பவங்களில் பல பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களின்போது பல தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். தற்போது ஜம்மு காஷ்மீரில் 200க்கும் குறைவான தீவிரவாதிகளே செயல்பட்டு வருவதாக காவல் துறை இயக்குநர் கூறுகிறார்.
"தெற்கு காஷ்மீர், வடக்கு காஷ்மீர் எந்தப்பகுதியாக இருந்தாலும் இவ்வாறான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமாக நிகழ்ந்து வருகின்றன," என்கிறார் ஸ்ரீநகரை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஆரூண் ரேஷி.
"தீவிரவாதிகள் நிறையப் பேரை கொன்றதாக பாதுகாப்பு படையினர் கூறுகிறார்கள். ஆனால், பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழக்கிறார்கள். இவை ஏன் நிகழ்கின்றன? பல தீவிரவாதிகள் கொல்லப்படும் போதிலும் இது உடனடியாக நிற்பதாக தெரியவில்லை. இதன் காரணம் என்ன என்பதை அறிந்து நாம் தீர்வை கண்டறிய வேண்டும்," என்கிறார் அவர்.
கலைக்கப்பட்ட மொகரம் பேரணி
சனிக்கிழமை ஸ்ரீநகரில் நடந்த மொகரம் பேரணி ஒன்றை ஆயுதப் பிரயோகம் நடத்தி காவல்துறையினர் கலைத்தனர். இந்த பேரணியில் கலந்து கொண்ட ஐந்து பேர் பெல்லட் குண்டு தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
"அனைத்து முக்கிய சாலைகளும் அடைக்கப்பட்டு முகரம் பேரணி அனுமதிக்கப்படாமல் உள்ளது என்று செய்ய நகரில் வசிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஷாஹிரி என்பவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
1354ஆம் ஆண்டு மொகரம் மாதம் பத்தாம் தேதி கர்பலா எனும் இடத்தில் நடந்த போரில் முகமது நபிகளின் பேரன் ஹஸ்ரத் இமாம் உசேன் உயிரிழந்ததன் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
பிற செய்திகள்:
- பிரசாந்த் பூஷணுக்கு ஆதரவாக களமிறங்கிய சட்ட மாணவர்கள்
- ஜிடிபி என்றால் என்ன, எப்படி கணக்கிடப்படும், ஏன் முக்கியம்?
- கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறையைச் சுத்தம் செய்த புதுச்சேரி அமைச்சர்
- சுவீடனில் குரானை எரித்த தீவிர வலதுசாரி அமைப்பு: கலவரமாக மாறிய போராட்டம்
- "பாஜக கட்டுப்பாட்டில் வாட்சாப்?" - காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: