You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரசாந்த் பூஷணுக்கு ஆதரவாக களமிறங்கிய சட்ட மாணவர்கள்: “நீதிபதிகளை விமர்சிப்பது குற்றமல்ல”
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு சட்ட மாணவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 122 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு இதுதொடர்பாக "உணர்ச்சிமிகு கடிதம்" எழுதியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் முன்னாள் தலைமை நீதிபதிகள் தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்புடைய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த மாணவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், "பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் விதத்திலேயே நீதித்துறை விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டும். வேதனை மற்றும் நீதி வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு விமர்சனம் வரும்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்து அவர்களுக்கு தண்டனை அளிக்கக்கூடாது. பலருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று உதவி செய்யும் நபர், அதே நீதி கிடைக்க வேண்டும் என்று மற்றவர்களை கேட்கிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் மனித உரிமைகளுக்காகவும் ஊழலுக்கு எதிராகவும் பல ஆண்டுகளாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நீதிமன்றங்களில் வாதாடுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
தேசத்திற்காகவும், நீதித்துறைக்காகவும் அவர் ஆற்றிய பங்கு பலராலும் கொண்டாடப்படுகிறது என அந்த கடிதத்தில் மாணவர்கள் எழுதியுள்ளனர்.
"குரலற்றவர்களின் குரலாக அவரின் ட்வீட்டுகள் உள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தொடர்பாக அவர் பதிவிட்டிருந்த இரண்டு ட்வீட்டுகள், நீதிமன்றத்தின் மீது கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இல்லை. இவை அனைத்தும் நீதியை நோக்கிய நீதிபதிகளின் அணுகுமுறையை பொறுத்ததே" என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நியாயமான முறையில் நீதிபதிகளை விமர்சனம் செய்வது ஜனநாயகத்தால் வழங்கப்படும் தேவையான ஒரு உரிமையே தவிற அது குற்றமல்ல எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்ன வழக்கு?
கடந்த ஜூன் மாதம், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஒரு உயர்தர மோட்டார் சைக்கிளில் இருப்பது போன்ற படம் மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இதுவரை இருந்த நான்கு பேரின் பங்களிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.
இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மஹேக் மஹேஸ்வரி, கடந்த ஜூலை 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். காவ்ய, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
அதில் பிரசாந்த் அளித்த விளக்கத்தால் திருப்திய அடையாத நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை மீதான வாதங்கள் கடந்த வாரம் நடைபெற்றபோது, பிரசாந்த் பூஷண் தனது கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்பது தொடர்பாக இரண்டு, மூன்று நாட்களுக்கு நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.
ஆனால், "இந்த நீதிமன்றத்தில் ஏற்கெனவே பதிவு செய்த கருத்திலிருந்து தற்போது விலகினால், அது நேர்மையற்ற மன்னிப்பாகவே அமையும். நான் மிக உயரியதாக போற்றும் உச்ச நீதிமன்றத்தில் அப்படி செய்தால், அது எனது மனசாட்சியை அவமதிக்கும் செயலாகவே எனது பார்வையில் படும்" என்று பிரசாந்த் பூஷண் எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் நாளை தண்டனையில் விவரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: