You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளா மூணாறு நிலச்சரிவு: “சொந்தமும் இல்லை, எதிர்காலமும் இல்லை” - இதுதான் கள நிலவரம் #GroundReport
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்,
- பதவி, பிபிசி தமிழுக்காக
"உடன் இருந்த அண்ணன், தம்பி, தெரிந்தவர்கள் என அனைவரையும் பறிகொடுத்து விட்டு நிற்கிறோம். இறந்தவர்களின் உடலை அடையாளம் காண இறைவன் என்னை உயிருடன் வைத்துள்ளான்" என்கிறார் மூணாறு நிலச்சரிவில் தனக்கு நெருக்கமானவர்களை இழந்த முருகன்.
மூணாறு நிலச்சரிவில் சிக்கிய நபர்களின் உடல்களைத் தேடும் பணி 9ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் மூணாறு ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு நிலச்சரிவில் சிக்கியது. இதில், 25 வீடுகளில் வசித்த 82 பேர் மண்ணில் புதையுண்டனர்.
ஆகஸ்ட் 7-ம் தேதி முதல், மண்ணில் புதையுண்ட உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தம் இதுவரை 56 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 15 நபர்களின் உடல்கள் இன்று ஒன்பதாவது நாளாகத் தேடப்பட்டு வருகிறது.
இந்த நிலச்சரிவில் தனது உறவினர்களைப் பறிகொடுத்த முருகன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "மூணாறின் அழகை ரசிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து மூணாறு வருவார்கள்.
மூணாறை அழகுபடுத்திய மக்கள் தற்போது உயிருடன் இல்லை. மூன்று தலை முறைக்கு முன்பு வாசுதேவநல்லூரில் இருந்து தேயிலை தோட்ட கூலி தொழிலுக்காக 30 பேர் இங்கு வந்தனர். உடன் இருந்த அண்ணன், தம்பி, தெரிந்தவர்கள் என அனைவரையும் பறிகொடுத்து விட்டு நிற்கிறோம்" என கண்ணீருடன் தெரிவித்தார்.
"பல ஆண்டுகளாக நாங்கள் இங்கு மழையைப் பார்த்துள்ளோம். ஆனால், இந்த மாதிரி ஒரு மழையை பார்த்ததில்லை" என்கிறார் நிலச்சரிவு சம்பவத்தில் தனது உறவினர்களை இழந்த சாந்தா
"இந்த மழை இவ்வளவு பெரிய அழிவைத் தரும் என நாங்கள் நினைத்துக் கூட பார்க்க வில்லை. தேயிலைத் தோட்ட கூலி வேலை செய்து பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்தோம். இந்த நிகழ்வு எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது" என்று சாந்தா கூறுகிறார்.
பாதிக்கப்பட்ட கார்த்திக் கூறுகையில், "நிலச்சரிவில் சிக்கி காணமல் போன உடல்களைக் கண்டுபிடிக்க இங்குள்ள இரண்டு நாய்கள் உதவியது. இதுவரை 12 உடல்களை மீட்க இந்த நாய்கள் உதவியுள்ளது. எங்களுக்கு உடுத்த உடையில்லை, அரசு உதவி செய்ய வேண்டும். என்னுடைய ஜீப், ஆட்டோ தண்ணீரில் அடித்து சென்று விட்டது. என் வாழ்வாதரம் அனைத்தையும் இழந்து நிற்கிறேன். என் கையில் பத்து ரூபாய் பணம் கூட இல்லை" என வேதனையுடன் பேசினார்.
இந்த நிலச்சரிவில் தனது பல உறவினர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறுகிறார் விஜய். இது மிகவும் வேதனையளிக்கிறது.
சின்ன குழந்தையின் பிறந்தநாள் விழாவை கொண்டாட வந்த 15 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துவிட்டனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக விஜய் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- எடப்பாடி பழனிசாமி Vs ஓ. பன்னீர்செல்வம்: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்?
- இலங்கை : மஹிந்த ராஜபக்ஷவுடன் சமரசமாக செல்வேனா? - அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேட்டி
- இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த 'ரகசிய வானொலி நிலையம்'
- இஸ்ரேல் - பாலத்தீனம்: என்ன பிரச்சனை? - 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: