You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கு.க. செல்வம்: கட்சியிலிருந்து நீக்கம் - திமுக அறிவிப்பு
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதால் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை ஆயிரம் விளக்குத் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் தில்லியில் சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு, பா.ஜ.கவின் தலைமையகத்தில் நடந்த விழாவிலும் கு.க. செல்வம் கலந்துகொண்டார். ஆனால், தான் பா.ஜ.கவில் இணையவில்லையென்றும் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பிறகு ஊடகங்களில் பேசிய அவர், தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலர் பொறுப்பு தனக்கு தரப்படவில்லை என்பது குறித்து அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து கு.க. செல்வத்தை தலைமை நிலைய அலுவலகச் செயலர், தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளைப் பறித்த தி.மு.க., அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பியது.
இந்த நோட்டீசிற்கு கு.க. செல்வம் சார்பில் விளக்கம் அனுப்பப்பட்டது. அந்த விளக்கத்தில் "தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் மற்ற கட்சித் தொண்டர்களையோ, தலைவர்களையோ சந்திக்கக் கூடாது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே, கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியல்ல. இது இயற்கை நீதிக்கு விரோதமானது" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கு.க. செல்வம் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாத காரணத்தால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கிவைக்கப்படுகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: