You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பா?: விசாரணை நடத்துவதாக நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
நிலத் தகராறு ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதா என விசாரித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான இதயவர்மனுக்கும் இமயம்குமார் என்பவருக்கும் இடையே செங்காடு என்ற பகுதியில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக நீண்ட காலமாக தகராறு இருந்து வந்தது.
இது தொடர்பான பிரச்சனையில் கடந்த ஜூலை 11ஆம் தேதியன்று இமயம்குமார் தரப்பினர் இதயவர்மனின் தந்தை லட்சுமிபதியை அரிவாளால் வெட்டியதாகவும் பதிலுக்கு இதயவர்மன், லட்சுமிபதி ஆகியோர் தங்களது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கீரை வியாபாரியான சீனிவாசன் என்பவர் காயமடைந்தார். அரிவாள் வெட்டில் லட்சுமிபதி, குருநாதன் ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் இதயவர்மன் உட்பட இருதரப்பிலும் பலர் கைதுசெய்யப்பட்டனர். இதயவர்மன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் துப்பாக்கியும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. இதற்குப் பிறகு இதயவர்மன் உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது.
இதையடுத்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், சம்பவம் நடந்த போது தாங்கள் அங்கு இல்லை எனவும், அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிமம் காலவதியான துப்பாக்கி கொண்டு இதயவர்மன் சுட்டதாகவும் அவருக்குச் சொந்தமான இடத்தில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இதயவர்மன் தோட்டாக்களை தயார் செய்தாரா என்பது குறித்தும் அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தற்போது விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, இது தொடர்பான விசாரணை ஆவணங்களையும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தோரின் மருத்துவ அறிக்கைகளையும் வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 6) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :