You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகம்: மூன்று வயதுக் குழந்தைக்கு உடலுக்கு வெளியில் செயற்கை இதயம்
இருதயம் செயல் இழந்துவந்த ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவனுக்கு உடலுக்கு வெளியில் செயற்கை பம்ப்களைப் பொருத்தி சிறுவனைக் காப்பாற்றியுள்ளது சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்று.
ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவனான லெவ் ஃபெடரன்கோவுக்கு நீண்ட நாட்களாகவே இருதயத்தில் பிரச்சனை நீடித்துவந்தது. அவனது இதயத்தின் கீழ் இரண்டு அறைகளின் - வென்ட்ரிக்கிள்கள் - தசைகள் கடினமாக இருந்தன. இதனால், அவை சுருங்கி - விரிவதில் பிரச்சனை ஏற்பட்டு (restrictive cardiomyopathy) ரத்தத்தை உடலின் பிற பாகங்களுக்குக் கடத்துவதில் சிக்கல் நீடித்துவந்தது.
ரஷ்யாவிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட அந்தச் சிறுவன், சென்னையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் என்ற தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு மாதங்களாகச் சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது. ஆனால், சிகிச்சையில் இருக்கும்போதே சிறுவனுக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இயங்காத வென்ட்ரிக்கிள்களுக்குப் பதிலாக இரண்டு செயற்கை பம்ப்களைப் (Paediatric Biventricular) பொருத்த மருத்துவர்கள் முடிவுசெய்தனர்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
இது மிகவும் சிக்கலான ஒரு அறுவை சிகிச்சை. இந்தியாவில் பெரியவர்களுக்கு இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும் குழந்தைகளுக்கு செய்யப்பட்டதில்லை. தவிர, குழந்தைகளுக்கான இந்த இதய பம்ப்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
இதனால், ஜெர்மனியில் உள்ள பெர்லின் ஹார்ட் என்ற நிறுவனத்தைத் தொடர்புகொண்டு அங்கிருந்து இந்த பம்ப்பைப் பெற முடிவெடுக்கப்பட்டது.
முதல் முறையாக குழந்தைக்கு இம்மாதிரி பம்ப்பை பொருத்தும் முயற்சி என்பதால் இதில் நிபுணத்துவம் உடைய மருத்துவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோர் பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து டெலி கான்ஃபரன்சிங் மூலம் நேரலையில் ஒருங்கிணைக்கப்பட்டனர். டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன், டாக்டர் சுரேஷ் ராவ் ஆகியோர் அடங்கிய மருத்துவர்கள் குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கு பிறகு சில நாட்களில் குழந்தை மெல்ல மெல்ல தேற ஆரம்பித்துள்ளது.
பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருந்தாலும் ஆசிய நாடுகளில் இம்மாதிரி அறுவை சிகிச்சைகள் மிகவும் குறைவாகவே செய்யப்பட்டிருக்கின்றன.
"உலகம் முழுவதும் கோவிட் பெருந்தொற்றின் காரணமாக முடங்கியிருக்கும் சூழலில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். இந்தத் தருணத்தில் இந்த சிகிச்சையைத் தவிர வேறு வாய்ப்பே இல்லை" என்கிறார் எம்ஜிஎம் மருத்துவமனையின் இருதய அறிவியல் பிரிவின் தலைவர் டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன்.
இந்தக் கருவியைப் பொறுத்தவரை இரண்டு அறைகள் இருக்கும். ஓர் அறையில் ரத்தமும் மற்றுமொரு அறையில் காற்றும் நிரம்பியிருக்கும். இந்த இரண்டு அறைகளையும் மெலிதான சவ்வு ஒன்று பிரிக்கும். ரத்தம் நிரம்பிய அறை குழாய்களின் மூலம் குழந்தையின் இருதயத்தோடு இணைக்கப்பட்டிருக்கும். காற்று நிரம்பிய அறை ஒரு குழாய் மூலம் கருவி ஒன்றோடு இணைக்கப்பட்டிருக்கும். இந்தக் கருவி காற்றை உள்ளே அனுப்புவதும் வெளியில் இழுப்பதுமாகச் செயல்படும். இதனால், அந்த மெல்லிய சவ்வு முன்னும் பின்னுமாக மற்றொரு அறையில் உள்ள ரத்தத்தை 'பம்ப்' செய்யும்.
எவ்வளவு காலத்தில் இந்தக் குழந்தை இந்த பம்புடனேயே வாழ வேண்டியிருக்கும்? "இது குழந்தை என்பதால் விரைவிலேயே இருதய தசைகள் மேம்பட வாய்ப்பிருக்கிறது. இரண்டு - மூன்று ஆண்டுகளில் தசைகள் மேம்பட்டவுடன் இவற்றை அகற்றிவிடலாம். இல்லாவிட்டால், இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்" என்கிறார் இந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற டாக்டர் சுரேஷ் ராவ்.
அறுவை சிகிச்சை பெற்ற இந்தக் குழந்தை தற்போது தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறது. நடப்பதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டுவருகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: