அப்துல் கலாம் : எளிய குடும்பத்தில் பிறந்து குடியரசுத் தலைவரான தமிழரை எப்படி நினைவுகூர்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
ராமேஸ்வரத்தில் ஓர் எளிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ஏ.பி.ஜே.அப்துல்கலாம், விஞ்ஞானியாகி, பிரதமரின் அறிவியல் ஆலோசகராகி, குடியரசுத் தலைவராக உயர்ந்து 2015ம் ஆண்டு இதே நாளில் மறைந்தார்.தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில், ஒரு படகோட்டியின் மகனாக 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள் பிறந்தார் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்.
இந்தியாவின் அக்னி ஏவுகணை, அணுவெடிச் சோதனை ஆகியவற்றில் இவரது பங்களிப்பு இவருக்கு புகழை தேடித் தந்திருந்தன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் (DRDO) ஆகியவற்றில் பதவிகள் வகித்தார் அப்துல் கலாம்.
பல குடியரசுத் தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும், அப்துல் கலாம் நாட்டில், இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய உற்சாகம், தாக்கம் மற்றவர்களில் இருந்து பெரிதும் மாறுபட்டது.
ஒரு விஞ்ஞானியான அப்துல் கலாம் 2002ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக ஆனபோது, அது ஆச்சரியத்தையும் அளித்தது. ஆர்.வெங்கட்ராமனுக்குப் பிறகு ஒரு தமிழர் குடியரசுத் தலைவர் ஆகிறார் என்ற வகையில் தமிழகத்தில் ஓர் உற்சாகத்தையும் பரவவிட்டது.
2007 ஜூலை 25 வரை அப்துல் கலாம் அந்தப் பதவியில் இருந்தார்.
பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் அவரது பங்களிப்புகளால் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பே அவருக்கு ஒரு நாயக பிம்பம் உருவாகிவிட்டது உண்மைதான். ஆனால், இளைஞர்கள், மாணவர்களிடத்தில் அவர் நிகழ்த்திய உரையாடல், மரபாக ஒரு குடியரசுத் தலைவர் நிகழ்த்தும் உரையாடலின் எல்லையைக் கடந்து மிக நெருக்கமாக உணரப்பட்டது அவரது புகழுக்கு ஒரு காரணம்.
மற்றொன்று, தங்களைப் போன்ற எளிய குடும்பத்தில் பிறந்து மிக உயர்ந்த இடத்துக்கு உயர்ந்தவர், எளிமையானவர் என்பது மக்கள் தங்களோடு அவைரை அடையாளப்படுத்திக்கொள்ளக் காரணமாக அமைந்தது.
சில பத்தாண்டுகளில் புதிதாக எழுச்சி பெற்ற பாஜக தங்கள் மீதேசியவாத அரசியலின் ஒரு சின்னமாக அவரை முன்னிறுத்தியதும், அவரது பரவலான பிரபலத்துக்கு ஒரு காரணம்.
அக்கினிச் சிறகுகள் என்ற பெயரில் தமிழிலும், wings of fire என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியான அவரது சுய சரிதை பரவலாக வாங்கப்பட்டு, படிக்கப்பட்டது. இளைஞர்கள் நம்பிக்கை தரும் நூலாக அதைப் பார்த்தனர். ஆனால், 2015ல் அப்துல் கலாம் இறந்தபோது அவர் புகழின் உச்சியை எய்தினார். ஆனால், நான்கே ஆண்டுகளில் அந்தப் பிரபல்யம் சற்று மங்கி, கடந்த ஆண்டு அவரது நினைவு நாளில் சற்று மந்தமாகவே அவர் நினைவுகூறப்பட்டார். பழைய உற்சாகம் வடிந்துபோயிருந்தது.
கடந்த ஆண்டு அவரது நினைவு நாள் இப்படித்தான் இருந்தது:
இந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு என்பதால் ராமேஸ்வரத்தில் பேக்கரும்பில் உள்ள கலாம் தேசிய நினைவகத்தில் அவரது 5-வது நினைவு நாளில் பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு துவா நிகழ்ச்சியில் கலாம் பேரன் சேக் சலீம், சேக் தாவூத், கலாம் சகோதரர் மகள் டாக்டர் நசிமா மரைக்காயர் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் வீரராகவ ராவ் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். சார் ஆட்சியர் சுகபுத்திர உள்ளோட்டோர் பங்கேற்றனர்.பிற செய்திகள்:
- எறும்புகளை சாப்பிட்டால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாமா?
- ஏ.ஆர்.ரஹ்மான் புறக்கணிக்கப்படுவதற்கு ஆஸ்கர் விருது காரணமா? என்ன சொல்கிறார் அவர்?
- இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கட்டளைப் பணி வழங்குவதால் என்ன பயன்?
- பணி நீக்கப்பட்ட ஊடக ஆசிரியர்: அவருக்கு ஆதரவாக ராஜினாமா செய்த 70 செய்தியாளர்கள்
- கொரோனா தடுப்பூசி: ஆக்ஸ்போர்டில் இருந்து நல்ல செய்தி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












