தமிழகத்தில் பரவும் அச்சம்: கொரோனாவுக்கு மத்தியில் தீவிரமாகும் மற்றொரு காய்ச்சல்:

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமணி: தமிழகத்தில் கொரோனாவுக்கு மத்தியில் தீவிரமாகும் மற்றொரு காய்ச்சல்

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மற்றொரு புறம் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மைக் காலமாகத் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு பரவலாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவுக்கும், டெங்குவுக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், அவர்களை அடையாளம் காண இயலாமல் இரண்டு பரிசோதனைகளைச் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சலுடன் வரும் நோயாளிகளுக்கு முதலில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால் அதன் முடிவுகளுக்குக் காத்திருக்கும் நிலை இருக்கிறது. இதனால், சம்பந்தப்பட்ட நோயாளிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதைக் கண்டறிவதற்குக் குறைந்தது மூன்று நாட்களாகிறது என்கிறது தினமணி செய்தி.

இந்தநிலையில், கொசு ஒழிப்பு பணிகளையும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா: திரையரங்குகள் திறப்பு எப்போது?

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் முதல் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளிக்க வேண்டும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகத்திற்குப் பரிந்துரை வழங்கியுள்ளது என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தி.

ஆகஸ்ட் 1-ம் தேதி அல்லது குறைந்தபட்சம் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அமித் காரே தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் முதல் வரிசையில், ஒரு இருக்கை இடைவெளி விட்டு பார்வையாளர்கள் அமர அனுமதியளிக்கப்படும். அடுத்த வரிசை காலியாக வைக்கப்பட்டும். அடுத்தடுத்த வரிசைகளில் இதேபோன்ற அமைப்பு பின்பற்றப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தி இந்து தமிழ்: செப்டம்பர்.7-க்கு பிறகு இடைத்தேர்தல்

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப். 7-க்கு பின்பு இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார் என தி இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

திமுக எம்எல்ஏக்களாக இருந்த கே.பி.பி.சாமி, காத்தவராயன், ஜெ.அன்பழகன் ஆகியோரின் மறைவால் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதி கள் காலியாக உள்ளன. மக்கள் பிரதிநிதித் துவ சட்டத்தின்படி, ஒரு தொகுதி காலி யானால் அங்கு 6 மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, திரு வொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளில் ஆகஸ்ட் இறுதிக்குள்ளும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு இந்த ஆண்டு இறுதிக்குள்ளும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது,``செப். 7 வரை இடைத்தேர்தல்களை நடத்த வாய்ப் பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்வது போன்ற பணிகள் தொடங்கிவிட்டன. செப்.7-க்குப் பிறகு எப்போது தேர்தல் தேதி அறிவித்தாலும் நடத்த தயார் நிலையில் உள்ளோம்.

தினத்தந்தி: சுதந்திர தின விழாவில் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு

இந்தியாவில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்படும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை அதிக கூட்டம் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து இருக்கிறது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி கொரோனா பரவலை ஒழிப்பதற்காக பாடுபடும் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களை சுதந்திர தின விழாவுக்கு அழைக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களையும் விழாவுக்கு அழைக்கலாம். அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் சுதந்திர தின விழாவை நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் மத்திய அரசுகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :