You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினிகாந்த் வாங்கிய இ-பாஸ்: தேதி, வாகனம் குறித்து நெட்டிசன்கள் கேள்வி
சமீப காலமாக நடிகர் ரஜினிகாந்த என்ன பேசினாலும், என்ன செய்தாலும் அவருக்கு எதிராகவும் , ஆதரவாகவும் ட்ரெண்ட் செய்துவருகிறார்கள் நெட்டிசன்கள்.
அந்த வகையில், ரஜினி இரண்டு நாட்களுக்கு முன்பு கேளம்பாக்கத்தில் உள்ள தனது மகளை பார்க்க சென்ற விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
தமிழகத்தில் பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்த பல விதமான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவசரத்துக்காக மக்கள் பயணிக்க வேண்டும் என்றால் இ-பாஸ் பெற வேண்டும்.
ரஜினி அவ்வாறு பயணிக்கும்போது இ-பாஸ் பெற்றுத்தான் பயணித்தாரா என்பதுதான் இப்போதைய கேள்வி.
ஜூலை 21ஆம் தேதி அன்று கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணைவீட்டில் வசித்துவரும் தனது மகளை பார்க்க ரஜினி சென்றார். அவரே அவரது காரை ஓட்டிச் செல்லும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியது.
இதனையடுத்துதான் அவர் இபாஸ் வாங்கி பயணித்தாரா என்ற விவாதம் எழ ஆரம்பித்தது.
அப்போது இதுதொடர்பாக பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அவர் இபாஸ் பெற்றாரா என்பதை விசாரித்துதான் கூற முடியும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் அவர் இ-பாஸ் பெற்றதாக அதன் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அதில் அவர் மருத்துவ காரணங்களுக்காக இ-பாஸ் பெற்றார் என்பது தெரிய வந்துள்ளது.
ஆனால், அதில் பயணத் தேதி ஜூலை 21ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 23 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நெட்டிசன்கள் மேலும் பல கேள்விகளை எழுப்ப காரணமாகியுள்ளது.
இ-பாஸில் குறிப்பிடப்பட்டுள்ள வாகனம், ரஜினிகாந்த் பயணித்த வாகனம் ஆகிய இரண்டும் வெவ்வேறாக உள்ளன என்றும் சிலர் கூறுகின்றனர்.
மருத்துவ அவசரம் என்று காரணம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உடல்நிலை சரியில்லாதவர் தானே வாகனம் ஓட்டிக்கொண்டு, பண்ணை வீட்டுக்குச் சென்றாரா என்றும் அவரை சிலர் சமூக ஊடகங்களில் விமர்சிக்கின்றனர்.
'உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் எங்கே?'
எல்லோரும் கேட்டபடி ரஜினியின் இ-பாஸ் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், உதயநிதியின் இ-பாஸ் எங்கே என்று ஒரு தரப்பினர் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளனர்.
சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர் காவல் மரணத்தின்போது திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் வாங்கிய பின்னரே, அங்கு சென்றதாக அப்போது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அவர் இ-பாஸை வெளியிட வேண்டும் என்று கேட்டும் ட்விட்டரில் பதிவிடப்பட்டு வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: