தமிழகத்தில் இறுதியாண்டு தவிர்த்த அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்து

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள், பாலிடெக்னிக்களில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அவை இன்னும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் அது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. தேர்வு நடத்த இயலாத சூழல் இருப்பதாக அந்தக் குழு தெரிவித்தது.

இதையடுத்து கல்லூரி, பாலிடெக்னிக் ஆகியவற்றுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்துசெய்ய மாநில அரசு முடிவுசெய்துள்ளது.

கல்லூரிகளிலும் பாலிடெக்னிக்களிலும் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள், முதுகலைப் படிப்பில் முதலாம் ஆண்டு படிப்பவர்கள், இளநிலை பொறியியல் படிப்பில் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆண்டு படிப்பவர்கள், முதுநிலை பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு படிப்பவர்கள், எம்.சி.ஏ. படிப்பில் முதலாம், இரண்டாம் ஆண்டு படிப்பவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த மாணவர்கள் அடுத்த ஆண்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும், யுசிஜி மற்றும் ஏஐசிடிஇ ஆகியவை அளித்த வழிகாட்டுதல்களின்படி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இதுவரை அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :