You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமுதா ஐஏஎஸ் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமனம் - யார் இவர்?
தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐஏஎஸ் பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமுதா 1994ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்தவர்.
கருணாநிதியின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை ஏற்று கவனித்து கொண்ட அமுதா ஐஏஎஸ், அப்போது தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளையும் அமுதா பொறுப்பேற்று நடத்தியுள்ளார்.
யார் இந்த அமுதா ஐஏஎஸ்?
அமுதா தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மசூரியில் உள்ள ஐஏஎஸ் அகாதமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
மதுரையைச் சேர்ந்த அமுதா 1994ஆம் ஆண்டு தமிழக அளவில் முதலிடம் பெற்று ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
சிறு வயதில் கபடி வீராங்கனையாக இருந்த அமுதா ஐஏஎஸ், பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரைதான். அவரது பெற்றோர் மத்திய அரசு ஊழியர்கள். அவரது தாத்தா ஒரு சுதந்திர போராட்ட தியாகி என ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார் அமுதா.
அமுதாவின் கணவர் ஷம்பு கல்லோலிகர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி.
திமுக, அதிமுக, ஆகிய இரண்டு ஆட்சிகளிலும் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அமுதா, தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யலாம் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த உடனேயே, இது தொடர்பாக அங்கு நிர்வகிக்கும் பணி அமுதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு, அங்கும் இங்கும் நடந்து அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து கொண்டிருந்த அமுதா பெரிதும் கவனிக்கப்பட்டார்.
ஐந்தே மணி நேரத்தில் இறுதிச் சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக கவனித்தார் அமுதா. சமூக ஊடகங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.
அந்த சமயத்தில் அதுகுறித்து பிபிசி தமிழின் செய்தியாளர் அபர்ணா ராமமூர்த்தியிடம் அமுதா பேசியிருந்தார்.
"அனைத்தையும் படிப்படியாக ஒருங்கிணைத்தோம்; 11 மணிக்கு எங்களுக்கு தீர்ப்பு தெரிய வந்தவுடன் பணிகளை தொடங்கிவிட்டோம். வெறும் ஐந்திலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் இதையெல்லாம் செய்தது கடினமாக இல்லை ஆனால் பெரும் சவாலாக இருந்தது," என்று தெரிவித்திருந்தார்.
ஒரு மாபெரும் தலைவருக்கு இறுதிப் பணிகள் செய்வதற்கு வாய்ப்பளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அமுதா தெரிவித்திருந்தார்.
தலைவர்களுடன் பணியாற்றிய அனுபவம்
கருணாநிதி ஒரு கடினமான உழைப்பாளி, சுறுசுறுப்பாக இயங்குவார், சாமர்த்தியமாக செயல்படக்கூடியவர் என்றும் ஜெயலலிதா அறிவாற்றல் மிக்க பெண்மணி, விரைவாக முடிவெடுக்கக்கூடியவர் என்றும் இவ்விரு தமிழக முதல்வர்களிடேயே பணியாற்றிய அனுபவம் குறித்து DT Next நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் அமுதா.
"நம்முடைய சமமற்ற சமூகம், சமத்துவமின்மையின் முக்காடுகளை நீக்க விரும்பினேன். எல்லோரும் அரசாங்கத்திடம் இருந்து அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதே ஐஏஎஸ் அதிகாரியான பிறகு எனது எண்ணமாக இருந்தது," என்றும் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :