You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாடகி சுசித்ரா: சாத்தான்குளம் வழக்கு தொடர்பான காணொளியை நீக்கியது ஏன்? - பிபிசிக்கு அளித்த பேட்டி
சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் நீதிமன்ற காவலில் மரணமடைந்த சம்பவம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்ததற்கு பாடகி சுசித்ராவும் ஒரு முக்கிய காரணம்.
அவர் பேசி பகிர்ந்த காணொளி வைரலாக பகிரப்பட்டது. இரண்டு கோடிக்கும் அதிகமான பேர் அந்த காணொளியைப் பார்த்தார்கள். அதனை வைத்துப் பிற நாடுகளைச் சேர்ந்த யூ டியூபர்களும் சாத்தான்குளம் தொடர்பாகக் காணொளியை உருவாக்கி இருந்தார்கள்.
அந்த காணொளியில், ஏன் தென் இந்தியாவில் ஏதாவது நடக்கும் போது மட்டும் அது சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதில்லை? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.
பின்னர் அந்த காணொளியை அவரே நீக்கியும் விட்டார். அதிகார தரப்பிலிருந்து வந்த அழுத்தம்தான் இதற்குக் காரணம் என்றும் அவர் கூறி இருந்தார்.
இந்த நிலையில் பாடகி சுசித்திரா பிபிசியின் ஆண்ட்ரூ கிளாரன்ஸிடம் பேசினார்.
தென் இந்தியப் பிரச்சனை
அவர் நேர்காணலில் என்ன பேசினார் என தெரிந்து கொள்வதற்கு முன்பு, சுசித்ரா அந்த காணொளியில் பேசிய சில வரிகளை பார்ப்போம்.
"வணக்கம். நான் சுசித்ரா. நான் தென் இந்தியாவைச் சேர்ந்தவள். நாங்கள் ஆங்கிலம் பேசுவதில்லை. அதனால் தென் இந்திய பிரச்சனைகள் வெறும் தென் இந்தியாவின் பிரச்சனையாகவே இருக்கிறது. இதனை நான் வெறுக்கிறேன்" என்று கூறி இருந்தார்.
அந்த காணொளியின் இறுதியில், "இந்த அமைப்பை எதிர்ப்போம். நீங்கள் இந்த உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இந்த காணொளியை பகிருங்கள்," என குறிப்பிட்டு இருந்தார்.
இவைதான் இந்திய மக்களின் மனசாட்சியை உலுக்கியது. வைரலாக பகிரப்பட்டது. வெவ்வேறு நாடுகளை சேர்ந்த பலர் இந்த காணொளியை பகிர்ந்து இருந்தனர்.
கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், பெரும் தொழில் அதிபர்கள், இந்த காணொளியை பகிர்ந்து சாத்தான்குளம் சம்பவத்திற்கு உரிய விசாரணை கோரி இருந்தனர்.
ஆனால், முதலில் சுசித்ராவின் குற்றச்சாட்டுகளை போலீஸ் மறுத்தது. சுசித்ராவின் காணொளி உண்மைதன்மையற்றது; இது விசாரணையைப் பாதிக்கும் என்று கூறியது.
சுசித்ரா கூறுவது என்ன?
பின்னர் அந்த காணொளியை சுசித்ராவும் நீக்கினார்.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய சுசித்ரா, "தமிழக சி.ஐ.டி பிரிவை சேர்ந்த ஒரு காவலர் என்னை தொடர்பு கொண்டு, நான் வெளியிட்ட காணொளியில் உள்ள தகவலும், பிரேத பரிசோதனை அறிக்கையும் வெவ்வேறாக உள்ளது. அதனால், காணொளியை நீக்குங்கள் எனக் கோரி இருந்தார். நான் பிரேதப் பரிசோதனை அறிக்கையைக் கேட்டு இருந்தேன். ஆனால், அதனை கொடுக்க மறுத்துவிட்டார். சீல் இடப்பட்ட கவரில் அதனை நீதிபதிக்கு கொடுத்துவிட்டதாக கூறினார்," என்கிறார் சுசித்ரா.
மேலும் அவர், "சீலிடப்பட்ட கவரில் இருந்த ஒரு விஷயத்தை இவர் மட்டும் எப்படி பார்த்தார்? எனக்கு ஆச்சரியமாக இருந்தது." என்கிறார்.
பின்னர், வழக்குரைஞரின் ஆலோசனையின் பேரில் அந்த காணொளியை நீக்கிவிட்டதாகக் கூறுகிறார் சுசித்ரா.
அவர் காணொளியை நீக்கி இருந்தாலும், மக்களை முட்டாள் ஆக்க முடியாது என்கிறார் சுசித்ரா.
"இந்த காணொளி வைரலாக போனதற்கு 90ஸ் கிட்ஸும், மில்லினியல்ஸும் காரணம். நீங்கள் பொய்யைக் கூறி மக்களை ஏமாற்ற முடியாது. இளம் தலைமுறை அனைத்தையும் கவனித்து கொண்டிருக்கிறது," என்கிறார்.
போலீஸ் கொடுமை
போலீஸ் மிருகத்தனமாக நடந்து கொள்வது இந்தியாவில் மிகப் பிரச்சனையாக இருக்கிறது.
2019ஆம் ஆண்டு மட்டும் போலீஸ் காவலில் 1,731 பேர் பலியாகி உள்ளனர் என்கிறது இந்த தளத்தில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு.
அதாவது இரு நாளுக்கு ஐந்து பேர் பலியாகி உள்ளனர்.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய கர்நாடகாவின் முன்னாள் ஐ.ஜி கோபால், சட்டப்படி நடப்பது ஒரு போலீஸுக்கு மிக முக்கியம் என்கிறார்.
"போலீஸ் பலத்தை பிரயோகிக்காமல் வேறு வழிகளில் ஆதாரத்தைத் திரட்ட வேண்டும்," என்கிறார் கோபால்.
சாத்தான்குளத்தில் நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கடந்த ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளத்தில் தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியது.
இப்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :