சச்சின் பைலட்: யார் இவர்? - முக்கிய 10 தகவல்கள்

கொரோனா பரவல், தடுப்பு மருந்து என பல விஷயங்களையும் தாண்டி, தற்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த சச்சின் பைலட் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளார்.

அண்மைய செய்திகளின்படி, ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்தும், துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தபோது, முதல்வர் பதவிக்கு சச்சின் பைலட்டின் பெயரும் அடிபட்டது.

ஆனால், இறுதியில் அசோக் கெலோட் முதல்வராக பதவியேற்றார். சச்சின் பைலட் துணை முதல்வராக பதவியேற்றார்.

தற்போது சச்சின் பைலட்டின் நடவடிக்கைகள் மிகுந்த கவனத்தை பெற்றுள்ள நிலையில், அவர் யார் என்பது குறித்தும், அவரது அரசியல் பின்னணி குறித்தும் 10 முக்கிய விஷயங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

1. உத்தரபிரதேசம் மாநிலம் சாஹரன்பூரில் 1977-ஆம் ஆண்டு பிறந்த சச்சின் பைலட், டெல்லியில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். பின்னர் புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டக்கல்வியையும், அமெரிக்க பல்கலைக்கழகமொன்றில் மேலாண்மை தொடர்பான உயர்கல்வியையும் சச்சின் முடித்துள்ளார்.

2. சச்சின் பைலட்டின் தந்தை ராஜேஷ் பைலட் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு நெருக்கமானவராக ராஜேஷ் பைலட் பார்க்கப்பட்டார். சச்சின் பைலட்டின் தாயான ரமா பைலட் காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

3. ஆரம்பத்தில் கார்ப்பரேட் துறையில் பணியாற்ற சச்சின் விரும்பினார். இந்திய விமான படையில் பைலட்டாக பணியாற்றவும் அவர் விரும்பினார்.

4. 2000-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சாலை விபத்தொன்றில் எதிர்பாராவிதமாக ராஜேஷ் பைலட் இறந்தது, சச்சின் பைலட்டின் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியது.

5. 2002-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சச்சின் பைலட் இணைந்தார்.

6. காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு முன்னர் பிபிசி அலுவலகத்தில் இதழியல் தொடர்பான பயிற்சியை சச்சின் பைலட் பெற்றார்.

7. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சாராவை சச்சின் பைலட் திருமணம் செய்தார். சிமி கார்வெல்லுக்கு அளித்த பேட்டி ஒன்றில் , "மதம் என்பது தனிப்பட்ட விஷயம். வாழ்க்கையில் முக்கியமான முடிவு ஒன்றை எடுக்கும் சமயத்தில், சாதி, மதம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஒருவர் முடிவு எடுக்கக்கூடாது,'' என்று சச்சின் குறிப்பிட்டார்.

8. 2009-ஆம் ஆண்டு ஆஜ்மீர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சச்சின் பைலட், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம், கார்ப்பரேட் விவகாரத்துறை ஆகிய துறைகளில் இணை அமைச்சராக இருந்துள்ளார்.

9. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவராக பார்க்கப்பட்ட சச்சின் பைலட் 2014 ஜனவரி முதல் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வந்தார்.

10. 2018-ஆண்டில் ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக சச்சின் பைலட் கருதப்பட்டார். ராஜஸ்தான் மாநில முதல்வராக அவர் தேர்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2018 டிசம்பரில் அவர் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :