இந்திய ரிசர்வ் வங்கி: கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத பொருளாதார பாதிப்பு - சக்தி காந்ததாஸ்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸால் இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார, சுகாதார நெருக்கடி நிலவுகிறது என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், வேலைவாய்ப்பு, உற்பத்தி, வாழ்க்கை முறை அனைத்திலும் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்மறையான சூழல் இருக்கிறது என்றும் கூறி உள்ளார்.
எஸ்பிஐ வங்கியின் 7-வது பொருளாதார மாநாடு மும்பையில் நடக்கிறது. இதில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் இணைய காணொளி வாயிலாக பங்கேற்றார்.
இதில் பேசிய அவர், இந்தியாவின் பொருளாதார அமைப்பைக் காப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு
கொரோனா தொற்று சுகாதாரம், பொருளாதாரம், மக்களின் நல்வாழ்வு, வேலை வாய்ப்பு போன்றவற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத தாக்கத்தினையும் எதிர்மறையான மாற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார் சக்தி காந்ததாஸ்.

பட மூலாதாரம், Getty Images
நம்முடைய பொருளாதாரம் மற்றும் நிதிக் கட்டமைப்பு முறைக்கும், வளர்ச்சிக்கும் மிகப்பெரிய சோதனையாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டைக் குறைத்து வருகிறது. இதுவரை 135 புள்ளிகள் குறைத்துள்ளது. நாட்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதைக் கையாளவும், சமாளிக்கவும் வட்டி வீதம் குறைக்கப்பட்டது என இந்த கூட்டத்தில் தெரிவித்தார் சக்தி காந்ததாஸ்.
இயல்பு நிலை
சமூக முடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் நாட்டின் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன என்று கூறிய சக்தி காந்ததாஸ் கொரோனா வைரஸால் வங்கிகள் மீது எந்தவிதமான தாக்கமும், பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்க ரிசர்வ் வங்கி பன்முகப் பாதுகாப்பு அணுகுமுறைகளை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












