You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய சீன எல்லையில் இருநாட்டுப் படைகளும் விலகத் தொடங்கின - களத்தில் என்ன நடக்கிறது?
இந்திய சீன எல்லையில், படைகள் விலகிச் செல்லத் தொடங்கின என்று எல்லை விவகாரத்தைக் கூர்ந்து கவனித்து வரும் இந்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஏற்பாட்டின்படி, எல்லையின் இருபுறமும் உள்ள படையினர் ஒருவர் கண்ணை ஒருவர் பார்க்கும் அளவு அருகிலிருந்து வந்த நிலை இனி இருக்காது. ஆனால், இந்த விலகல் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் தற்போது நடக்கும்.
"இந்தப் படை விலகல், கல்வான், கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய இடங்களில் நடக்கின்றன. வடக்கே இருக்கிற டெப்சாங் சமவெளி பற்றியோ, அதற்கும் தெற்கே இருக்கிற பங்காங் த்சோ ஏரி குறித்தோ நாங்கள் பேசவில்லை" என்று கூறினார் ஒரு அதிகாரி.
களத்தில் என்ன நடக்கிறது?
"இரு தரப்பிலும் உள்ள முகாம்கள் அகற்றப்படுகின்றன, தற்காலிக கட்டுமானங்கள் உடைக்கப்படுகின்றன. இதனை பின்வாங்கல் என்றோ, விவகாரம் முடிந்துவிட்டது என்றோ கூற முடியாது" என்கிறார் ஒரு அதிகாரி.
நேரடியாகவும், உயர்ந்த கோபுரங்கள் மற்றும், செயற்கைக்கோள் மூலமாகவும் இந்தப் பணி கண்காணிக்கப்படுவதாக ஓர் அதிகாரி தெரிவித்தார்.
எவ்வளவு தூரம் சீனப் படையினர் பின்னோக்கிச் சென்றிருக்கிறார்கள் என்பது பற்றி ஊடகங்கள் பல்வேறு விதமான தகவல்களை வெளியிட்டுள்ளன. ஆனால், அதிகாரிகள் அதைப் பற்றி பேச விரும்பவில்லை.
"எவ்வளவு தூரம் என்றெல்லாம் கூற முடியாது. ஜுன் 30-ம் தேதி கார்ப்ஸ் கமாண்டர் நிலையில் சுஷுல் என்ற இடத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்தபடி தற்போதுதான் விலகல் தொடங்கியுள்ளது" என்கிறார் அந்த அதிகாரி.
"ஜுலை 1ம் தேதி நடந்த சந்திப்பை தொடர்ந்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த சந்திப்பு கோவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக, மிகவும் முறையாக நடைபெற்றது. இந்த சந்திப்பு நீண்ட நேரம் நீடித்தது. மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் பதற்றம் தணியவேண்டும் என்ற உண்மையான அக்கறை இரு தரப்பிலுமே இருப்பதை இந்த சந்திப்பில் நடந்த உரையாடல்கள் பிரதிபலித்தன. இது போன்ற சூழ்நிலையில் மெய்யான கட்டுப்பாட்டுக்கோட்டினை ஒட்டிய பகுதிகளில் படைவிலகல் என்பது மிகவும் சிக்கலானது. எனவே, ஊகமாகவும், சரிபார்க்காமலும் வெளியிடப்படும் செய்திகள் தவிர்க்கப்படவேண்டும். இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நடைமுறைகளின்படி மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் அமைதியையும், இணக்கத்தையும் உறுதி செய்யும் வகையில் பரஸ்பரம் ஏற்கும் தீர்வுகளை எட்டுவதற்காக எதிர்காலத்தில் ராணுவ மற்றும் ராஜீய மட்டத்தில் மேலும் பல சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீன ஊடகம் என்ன சொல்கிறது?
"முன்கள எல்லைத் துருப்புகளை, ஒவ்வொரு குழுவாக விலக்கிக்கொள்வது என்று இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன. ராணுவ கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் எல்லையில் பதற்றத்தைத் தணிப்பதற்கான ஆர்வத்தை, பதற்றம் மேலும் அதிகரிக்காமல் தவிர்ப்பதற்கான அக்கறையை இரு தரப்பும் காட்டியதாக எல்லைப் படையுடன் தொடர்பில் உள்ள வட்டாரங்கள் கூறுகின்றன" என்று சீனாவின் தேசிய ஆங்கில நாளேடான 'குளோபல் டைம்ஸ்' தன்னுடைய செய்தியில் சொல்கிறது.
வெளியுறவு அமைச்சகம்
லடாக்கில் பிரச்சனைக்கு உரிய இடத்தில் படைகளை விலக்கிக் கொள்ள இந்தியா - சீனா ஒருமித்த முடிவு எடுத்துள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் அமைதி திரும்புவதை உறுதிப்படுத்தும் வரை அஜித் தோவல் - சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
சீனா கூறுவது என்ன?
இது தொடர்பாக சீன வெளியுறவு துறை பகிர்ந்துள்ள செய்திக் குறிப்பில், எல்லை விவகாரம் குறித்து இந்தியா சீனா என இரு தரப்பும் தொலைப்பேசி மூலமாக பேசியதாகவும், எல்லையில் பதற்றத்தை தணிக்க சுமூகமான ஒப்பந்தத்தையும் எட்டி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :