You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாத்தான்குளம் காவல் மரணங்கள்: ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் மூவர் கைது
சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை துணை ஆய்வாளர் ரகு கணேஷ் கைதுசெய்யப்பட்டுள்ளார். 4 காவலர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இன்று, வியாழக்கிழமை, அதிகாலை உதவி ஆய்வாளர் பால கிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பால கிருஷ்ணன், முருகன், முத்துராஜ் ஆகியோருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபின், காலை 10 மணியளவில் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி பிரிவினர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதரை கோவில்பட்டி அருகே சிபிசிஐடி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்திய நிலையில், தற்போது அவர் மீது கொலை வழக்கு மற்றும் தடயங்களை அளித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சாத்தான்குளத்தில் தங்களுடைய மொபைல் போன் கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு திறந்துவைத்திருந்ததாகக் கூறி, காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் சர்வதேச அளவிலான விவகாரமாக உருவெடுத்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்கை குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்துவந்தது.
புதன்கிழமையன்று காலையில் கொலைசெய்யப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்சின் கடை அருகில் உள்ளவர்கள், அவர்களது குடும்பத்தினரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியது. சாத்தான் குளம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் ரேவதியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
அதற்குப் பிறகு காவல் நிலையத்தில் உள்ள ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. சி.பி.சி.ஐ.டி. 12 குழுக்களை அமைத்து இதனை விசாரணை செய்தது.
இதற்குப் பிறகு, உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 4 பேர் மீது கொலை உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமையன்று அதிகாலை 12.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.சி.ஐ.டியின் ஐ.ஜி. சங்கர், "சி.பி.சி.ஐ.டி. இரண்டு வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது. அதில் ஒன்றை கொலைவழக்காக பதிவுசெய்து ஒரு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வேறு சில அதிகாரிகள் பற்றி நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில்பட்டி உரிமையியல் நீதிபதி பாரதிதாசன் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து சாத்தான்குளம் காவல்நிலைய எழுத்தர் பியூலா செல்வக்குமாரியிடம் நான்கு மணி நேரம் நடைபெற்று வந்த விசாரணை நிறைவடைந்தது.
காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா உத்தரவிட்டுள்ளார். வரும் 16ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டதையடுத்து, ரகு கணேஷ் தூத்துக்குடி பேரூரணி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டதை தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த நெடுங்குளம் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பிற செய்திகள்:
- காஷ்மீர் தாக்குதல்: ரத்தம் தோய்ந்த முதியவரின் சடலத்தின் மீது 3 வயது சிறுவன் – நெஞ்சை உலுக்கும் படம், நடந்தது என்ன?
- நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - 6 பேர் பலி; 4 மின் உற்பத்தி அலகுகளை மூட உத்தரவு
- ”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” - மஹிந்த ராஜபக்ஷ
- கொரோனா: பிகாரில் திருமணத்தில் கலந்து கொண்ட 111 பேருக்கு தொற்று; மணமகன் மரணம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: