கொரோனா வைரஸ் மருந்து: தமிழ்நாட்டில் கோவிட் - 19 தொற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்ன?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கோவிட் - 19 நோயாளிகளில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களில் தமிழ்நாட்டில் கோவிட் - 19 நோய்க்கான சிகிச்சையில் பல முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜூன் 29ஆம் தேதி நிலவரப்படி 86,224 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், 1,141 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது தொற்று ஏற்பட்டவர்களில் 1.3 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இது, டெல்லி, மகாராஷ்ட்ரா, குஜராத் போன்ற பெரும் எண்ணிக்கையில் தொற்று ஏற்பட்ட மாநிலங்களில் உள்ள இறப்பு விகிதத்தைவிட மிகக் குறைவு.

"மிகக் கவனமாக உருவாக்கப்பட்ட மருத்துவ முறையே இங்கு இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதற்குக் காரணம்" என்கிறார் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் பரந்தாமன்.

"கோவிட் - 19 நோயைப் பொறுத்தவரை, அந்த வைரஸை அழிப்பதற்கான முழுமையான மருந்து என ஏதுமில்லை. சில மருந்துகள் இருக்கின்றன. அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகள் அதிகம். சிலவற்றில் பக்க விளைவுகள் இல்லை. ஆனால், பலனும் இல்லை. இப்போது பரவலாகப் பேசப்படும் ஃபாபிஃப்ரவிர் இதற்கு முன்பாக இன்ஃப்ளூயன்சாவுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்து. ஆனால், கோவிட் - 19க்கு அளிக்கும்போது, அதிகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. 1,800 மில்லிகிராம் அளவுக்கு 14 நாட்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. இதனால் வைரஸ் கட்டுப்படுத்தப்படுகிறதா என்பதைவிட, பக்கவிளைவு என்ன என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது.

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ரெம்டிசிவர் மருந்தைப் பொறுத்தவரை, ஓரளவுக்குத்தான் பலனளிக்கிறது. வைரசின் தாக்கத்தை 15 நாட்களில் இருந்து 11ஆகக் குறைக்கிறது. ஆகவே, கோவிட் - 19 தொற்றை எதிர்கொள்ளச் சிகிச்சை அளிப்பதைவிட, அந்த வைரசால் உடலில் ஏற்படும் சேதங்களைச் சரிசெய்வதற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது," என்கிறார் பரந்தாமன்.

கோவிட் - 19 தாக்குதலில் உடலில் என்ன நேர்கிறது?

நமது உடலுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனை நுரையீரல் உறிஞ்சி, ரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின்கள் மூலம் உடல் முழுவதும் அனுப்புகிறது. இதனால், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் அடைந்து அதன் சக்தி உடலுக்கு செல்கிறது. ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், இதெல்லாம் தடைபட்டு, நோயாளி சிக்கலான நிலைக்குச் செல்வார்.

இந்த கோவிட் - 19 நோயைப் பொறுத்தரை, அறிகுறி உள்ள நோயாளிகளைப் பொறுத்தவரை முதலில் இரண்டு - மூன்று நாட்களுக்கு காய்ச்சல் இருக்கிறது. அதற்குப் பிறகு காய்ச்சல் இருப்பதில்லை. ஐந்தாவது, ஆறாவது நாட்கள் லேசாக மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. சிலருக்கு ஏழாவது நாள் ஏற்படுகிறது. அதுவரை நோயாளி நன்றாகவே இருப்பார். ஆனால், மூச்சுத் திணறல் வந்த அடுத்த நாட்களில், உடனடியாக நோயாளி மிகச் சிக்கலான நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள்.

நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் அடைபடுவதால் இது நடக்கிறது. இதனால், உடல் முழுவதும் ஆக்ஸிஜன் செல்வது தடைபடுகிறது.

நுரையீரலுக்குச் செல்லும் ரத்த நாளங்கள் அடைபடுவது ஏன்?

முதலில் வைரஸ் நுரையீரலில் உள்ள திசுக்களில் அமர்கிறது. அங்கிருக்கும் செல்களை சேதமடையச் செய்கிறது. இதனால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதனுடன் போரிட ஆரம்பிக்கிறது. இதையடுத்து உடலில் சைட்டோகன்கள் (cytokine)வெளியாகின்றன. ஐஎல் - 6 என்ற ஒரு சைட்டோகைன் ரத்த நாளங்களின் உட்புறத் தோலான என்டோதிலியத்தை (Endothelium)சேதப்படுத்துகிறது.

இந்த என்டோதிலியம்தான் ரத்தம் அதன் சரியான நீர்மத் தன்மையில் இருப்பதை உறுதிசெய்கிறது. ஆனால், ஐஎல் - 6 என்டோதிலியத்தை சேதப்படுத்தி, ரத்தம் உறையும் தன்மையை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் டிஎன்எஃப் ஆல்ஃபா, ஐஎல் 1 ஆகிய சைட்டோகைன்கள் ரத்தம் உறைவதைத் தடுக்கும் தன்மையைக் குறைக்கிறது. இந்த நிலைதான் localised pulmonary thrombotic microangiopathy என இந்த நிலை அழைக்கப்படுகிறது.

இதனால், நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஆங்காங்கே ரத்தம் உறைந்து, ரத்தம் செல்வது தடைப்படுகிறது. இதன் அடுத்த கட்டமாக, ஆக்ஸிஜன் செல்வது தடைபடுகிறது.

கோவிட் - 19 நோயின்போது நடப்பது இதுதான். இதன் காரணமாகவே, நோயாளிகளுக்கு மூச்சுத் திணற ஆரம்பிக்கிறது.

ஆரம்ப அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளிகளுக்கான சிகிச்சை என்ன?

"காய்ச்சல், இருமல் ஆகிய சாதாரண அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு LAMP என்ற முறையில் சிகிச்சை அளிக்கிறோம். இதில் L என்பது low molecular weight heparin. A என்பது azithromycin. M என்பது methylprednisolone என்ற ஸ்டீராய்ட். P என்பது Prone Positioning.

முதலில், நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் சேதத்தை நிறுத்த வேண்டும். அந்த சேதம் வீக்கத்தால் ஏற்படுகிறது. இதில் இரண்டு மருந்துகள் துணைசெய்கின்றன. ஒன்று ரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்து. மற்றொன்று வீக்கத்தைக் குறைக்கும் மருந்து. இதற்கு மெதில்ப்ரேட்னிசெலோன் அளிக்கப்படுகிறது.

முதலில், நோயாளிகளுக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்படுகிறது. அதன் மூலம் அவர்களுக்கு எந்த அளவுக்கு பிரச்சனை என்பது கணிக்கப்படுகிறது. வைரஸ் தன் தாக்குதல் துவங்கியிருப்பது தெரிந்தால், வீக்கத்தை குறைக்கும் மருந்தையும் ரத்தம் உறைவதைத் தடுக்கும் மருந்தையும் கொடுக்க ஆரம்பிப்போம். அடுத்ததாக, அடுத்த கட்ட தொற்று ஏற்படாமல் தடுக்க அஸித்ரோமைசின் போன்ற மருந்துகளைக் கொடுப்போம். இந்த சிகிச்சையை துவக்கத்திலேயே ஆரம்பித்துவிட்டால், நோயாளியைக் காப்பாற்றும் வாய்ப்புகள் அதிகம்" என்கிறார் டாக்டர் பரந்தாமன்.

இதற்கு அடுத்த படியாகதான் Prone positioning என்ற முறையைப் பயன்படுத்துகிறோம். அதாவது, பொதுவாக நுரையீரலின் பின் பகுதி சுருங்கி விரியாது. அதற்கான தேவையும் இருக்காது. ஆனால், கோவிட் தாக்கத்தால் நுரையீரலின் முன் பகுதி பாதிக்கப்பட்டிருக்கும்போது, அவர்களை கவிழ்ந்து படுக்கச் சொல்வோம். அப்படிப் படுத்தால், சுவாசம் மேம்படும். இது தமிழக அரசு மருத்துவமனையில் நாங்கள் புதிதாகக் கண்டறிந்தது என்கிறார் பரந்தாமன்.

தீவிர நிலையில் உள்ள நோயாளிகளுக்கான சிகிச்சை என்ன?

சமீபத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளி ஆக்ஸிஜன் உள்ளிழுக்கும் அளவு சற்று குறைவாக இருந்தாலும்கூட நன்றாகத்தான் இருந்தார். திடீரென அவரது ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டது. சிக்கலான கட்டத்திற்குச் சென்றுவிட்டார்.

அதற்கு என்ன காரணம் எனப் பார்த்தபோது, அவர் சற்று தூரம் எழுந்து நடந்திருந்தது தெரியவந்தது. ஆகவே, சிறிய அளவிலான உடல் இயக்கம்கூட, உள்ளிழுக்கும் ஆக்ஸிஜன் அளவைக் குறைத்துவிடுகிறது என்பதை மருத்துவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே, ஆக்ஸிஜன் குறைவான நிலையில் உள்ள நோயாளிகள் எந்த செயல்பாட்டிலும் ஈடுபடக்கூடாது.

அதேபோல, ஆக்ஸிஜனை உள்ளிழுக்கும் அளவு குறைவாக இருந்தாலும் நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும் நோயாளிகள் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிக்கலான நிலைக்குப் போய்விடுவார்கள்.

"இந்த நிலையில் உள்ள நோயாளிகளுக்கு என PALM என்ற மருத்துவ நடைமுறையை பின்பற்றுகிறோம். இதில் P என்பது prone positioning. A என்பது avoid activity L என்பது Low moleculor Happering M என்பது methylprednisolone. அதே நேரம் உடலில் சைட்டோகைன் அதிகரித்தால் டோசிலிசுமாப் என்ற மருந்து அளிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவர் போன்ற மருந்துகளும் அளிக்கப்படுகின்றன" என்கிறார் பரந்தாமன்.

டெக்ஸாமெத்தாசோன் மருந்தை தமிழ்நாடு பயன்படுத்துகிறதா?

சமீபத்தில் பிரிட்டனில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் டெக்ஸாமெத்தாசோன் என்ற ஸ்டீராய்டு சிக்கலான கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிப்பதாகத் தெரியவந்தது. ஆனால், தமிழக மருத்துவமனைகளில் டெக்ஸா மெதஸோன் பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கான காரணத்தை விளக்குகிறார் டாக்டர் பரந்தாமன்.

"ஸ்டீராய்ட்களைப் பொறுத்தவரை, அவை வேலைசெய்ய ஆரம்பிக்கவே 4 முதல் 6 மணி நேரம் ஆகும். டெக்ஸாமெத்தாசோனைப் பொறுத்தவரை வேலைசெய்ய 8 - 12 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். 48 - 72 மணி நேரம் வரை இதன் செயல்பாடு இருக்கும். ஆனால், மெதில்ப்ரெட்னிஸ்லோன், ஒப்பீட்டளவில் விரைவில் செயல்படத் துவங்கும். பலனும் அதிகம். குறிப்பாக நுரையீரல் தொடர்பான எந்தப் பிரச்சனைக்கும் மெதில்ப்ரெட்னிஸ்லோன் மருந்தே சிறந்தது. மூளை தொடர்பான பிரச்சனைகளுக்கு டெக்ஸாமெதஸோன் சிறந்த மருந்தாக இருக்கும். டெக்ஸாமெதஸோனில் மற்றொரு பிரச்சனையும் இருக்கிறது. மூளையில் ஹிப்போகாம்பஸ் என்ற ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தில் டெக்ஸாமெதஸோன் சேகரிக்கப்படும். இதனால், நினைவுகளில் பிரச்சனை வரும். மெதில்ப்ரெட்னிஸ்லோனில் அந்தப் பிரச்சனை கிடையாது" என்கிறார் பரந்தாமன்.

தவிர, இந்த ஸ்டீராய்டுகள் அனைத்துமே ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. ஆனால், டெக்ஸாமெதஸோனோடு ஒப்பிடுகையில் மெதில்ப்ரெட்னிஸ்லோன் சர்க்கரையை கூடுதாலக அதிகரிக்கும். "ஆகவே, சர்க்கரை நோயாளிகளுக்கு டெக்ஸாமெதஸோன் சிறந்த மருந்தாக இருக்கும். தவிர, சாதாரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு டெக்ஸாமெதஸோனும் தீவிரமாக பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு மெதில்ப்ரெட்னிஸ்லோனையும் பயன்படுத்தலாம்" என்கிறார் பரந்தாமன்.

வைரஸ் எதிர்ப்பைப் பொறுத்தவரை தற்போது இரண்டு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் உலகில் புழக்கத்தில் உள்ளன. ஒன்று ரெம்டெசிவர். மற்றொன்று ஃபாவிஃப்ரவிர். ஆனால், ஃபாவிஃப்ரவிர் மருந்தைப் பொறுத்தவரை, அதனை நோயாளிகளுக்கு நிறைய கொடுக்க வேண்டும். பின்விளைவுகளும் அதிகம். இந்த மருந்து, ஜப்பானிலும் சீனாவிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இன்னும் இதற்கு ஒப்புதல் இல்லை. ஆகவே, தமிழ்நாட்டில் வைரஸ் எதிர்ப்பு மருந்தாக ரெம்டெசிவர் மருந்தே நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது.

நள்ளிரவில் அதிகரிக்கும் மரணங்கள்

தமிழ்நாட்டில் கோவிட் - 19 காரணமாக ஏற்பட்ட மரணங்களை ஆய்வுசெய்தபோது, இரவில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. காலையில் நன்றாக இருந்தவர்கூட இரவில் இறந்துபோனார்கள் என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்தப் போக்கை ஆய்வுசெய்தபோது நள்ளிரவு மரணங்களுக்கான காரணங்கள் தெரியவந்தன என்கிறார் பரந்தாமன்.

"தூங்கும்போது உடலின் உறுப்புகள் அனைத்தும் செயல்பாட்டைக் குறைத்துக்கொள்ளும். நுரையீரலின் பணியும் குறையும். ஆனால், கோவிட் - 19 நோயாளிகளைப் பொறுத்தவரை ஏற்கனவே அவர்களது நுரையீரல் செயல்பாடு குறைத்து, ஆக்ஸிஜன் உள்ளே செல்வது குறைந்திருக்கிறது. இந்த நிலையில், தூங்கும்போது அவரது செயல்பாடு மேலும் குறைந்தால், நோயாளி மிக சிக்கலான கட்டத்திற்குச் சென்றுவிடுவார். ஆகவே, இப்படி இரவில் அதிக மரணங்கள் ஏற்படுவதற்குக் காரணம், இப்படி ஆக்ஸிஜன் உள்ளிழுப்பது குறைவதுதான் காரணம் என்பதைக் கண்டறிந்தோம். இதனால், இரவில் கொடுக்கும் ஆக்ஸிஜனின் அளவை அதிகப்படுத்துவோம். தொடர்ந்து அவரைக் கவனிப்போம். அதன் மூலம் நள்ளிரவு மரணங்களைத் தடுத்திருக்கிறோம்," என்கிறார் பரந்தாமன்.

கோவிட் - 19 நோயாளிகளைப் பொறுத்தவரை, காய்ச்சலுக்குப் பிறகு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, மூச்சுத் திணறல் உருவாகும் காலகட்டம்தான் மிக முக்கியம். இதனைக் கடந்துவிட்டால் நோயாளிகள் மீண்டுவிடுவார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மேற்கண்ட ஆய்வுகள், அவற்றில் ஏற்பட்ட பலன்களின் அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் டோசிலிசுமாப் (400 மி.கி.) 1,200 குப்பிகளும் ரெம்டெசிவர் (100 மி.கி.) 42,500 குப்பிகளும் எனோக்ஸபரின் (40 மி.கி.) ஒரு லட்சம் குப்பிகளும் வாங்குவதற்கு ஆணை பிறப்பித்துள்ளது.

திங்கட்கிழமையன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிபுணர் குழுவைச் சேர்ந்த மருத்துவர் ராமசுப்ரமணியம், தமிழக மருத்துவர்கள் கண்டறிந்துள்ள, பலனளிக்கக்கூடிய இந்த மருத்துவ முறைகளை ஒரு மருத்துவ நெறிமுறையாக மாற்றி (Protocol) தமிழ்நாட்டில் கோவிட் - 19 நோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய அனைத்து மருத்துவமனைகளுடனும் பகிர்ந்துகொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம், மேலும் பல மரணங்களைத் தடுக்கலாம் என தமிழக அரசு நம்புகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: