தமிழ்நாடு முழுவதும் ஜூலை 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்க நிலை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்ப் பரவல் அதிகமாக இருப்பதால், ஜூன் 19ஆம் தேதி முதல் முழுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. மதுரையில் ஜூன் 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கு அனைத்தும் ஜூன் 30ஆம் தேதியோடு முடிவுக்கு வரும் நிலையில், ஊரடங்கு தொடருமென தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 31ஆம் தேதிவரை தொடரும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரையின் பெரும் பகுதியில் ஜூலை 5ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு தொடரும். அதற்குப் பிறகு, தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ளதைப் போன்ற ஊரடங்கு இந்தப் பகுதிகளில் அமலில் இருக்கும்.

ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை மாவட்டங்களுக்குள் இயங்கிவந்த பொதுப் போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்படுகின்றன.

மேலும் ஜூலை 5, 12, 19, 26 தேதிகளில், அதாவது ஜூலை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும். தமிழ்நாட்டில் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு தொடருமென மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்கள்:

எங்கெங்கே முழு ஊரடங்கு?

தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை காவல் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், பொன்னேரி பேரூராட்சி, பூவிருந்தவல்லி, ஈக்காடு, சோழவரம் ஊராட்சி ஒன்றியங்கள், செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சிகள், நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சிகள், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம், காஞ்சிபுரத்தில் உள்ள சென்னை காவல் பகுதிகள், மதுரை மாநகராட்சிப் பகுதி, மதுரை கிழக்கு - மேற்கு, திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சிப் பகுதி ஆகியவற்றில் ஜூலை 5ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு தொடரும்.

ஜூலை 6ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ளதைப் போன்ற சாதாரண ஊரடங்கு இந்தப் பகுதிகளில் அமலில் இருக்கும்.

என்னென்ன தடைகள்?

ஏற்கனவே அமலில் உள்ள பின்வரும் தடைகள் தொடர்ந்து நீடிக்கும்:

1. நகர்ப்புற வழிபாட்டுத் தலங்கள், பெரிய வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் வழிபாட்டுக்குத் தடை.

2. அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை.

3. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கு வெளியூர் பயணிகள் செல்லத்தடை.

4. ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் திறக்க தடை நீடிக்கும். ஆனால், தனிமைப்படுத்தும் பணிகளுக்காக திறக்க அனுமதி உண்டு.

5. வணிக வளாகங்களைத் திறக்க அனுமதி கிடையாது. மெட்ரோ ரயில், மின்சார ரயில்கள் இயங்காது. மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து கிடையாது.

6. பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். இணையவழி கற்றல் ஊக்குவிக்கப்படும்.

7. திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், மதுக்கூடங்கள் போன்ற பெரிய அளவில் மக்கள் கூடும் இடங்களுக்குத் தடை நீடிக்கும்.

8. எல்லா வகையான சமுதாய, அரசியல், பொழுது போக்குக் கூட்டங்கள், ஊர்வலங்களுக்குத் தடை நீடிக்கும்.

மேலும் ஜூலை 5, 12, 19, 26 தேதிகளில், அதாவது ஜூலை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும்.

திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது.

தற்போது மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவை ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை ரத்துசெய்யப்படுகிறது. ஏற்கனவே உள்ள இ - பாஸ் நடைமுறைகள் தொடர்ந்து நீடிக்கும்.

முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் ஜூலை 6 முதல் தளர்வு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜூலை 6ஆம் தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 50 சதவீதப் பணியாளர்கள், 80 பேருக்கு மிகாமல் வேலை செய்யலாம். நிறுவனமே வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

2. அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படலாம். இருந்தபோதும் வீட்டிலிருந்தபடி பணியாற்றுவதை ஊக்குவிக்க வேண்டும்.

3. வணிக வளாகங்களுக்கு வெளியில் உள்ள கடைகள் 50 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படலாம். அதிக பட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் இருக்க வேண்டும்.

4. உணவகங்களில் அமர்ந்து உண்ண அனுமதிக்கலாம். ஆனால், 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும். குளிர்சாதன வசதி கூடாது.

5. காய்கறிக் கடைகள், மளிகைக்கடைகள், தேநீர் கடைகள், உணவு விடுதிகள் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை இயங்கலாம்.

6. வாடகை வாகனங்கள் ஓட்டுனர் தவிர்த்து மூன்று பேருடன் இயங்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர, இரண்டு பேர் பயணிக்கலாம்.

7. முடி திருத்தும் நிலையங்கள் முன்பே வழங்கப்பட்ட ஆணைகளின் படி இயங்கலாம்.

8. இறைச்சி, மீன் கடைகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி இயங்கலாம்.

திறக்கப்படும் வழிபாட்டு நிலையங்கள்

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை பகுதிகளில் ஜூலை 6ஆம் தேதி முதலும் பிற பகுதிகளில் ஜூலை 1ஆம் தேதி முதலும் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தளர்வுகள் சென்னைக்குப் பொருந்தாது. அதன்படி,

1. கிராமங்களில் உள்ள சிறிய கோவில்கள் அதாவது 10,000 ரூபாய்க்கு குறைவான வருவாய் உள்ள கோவில்கள், சிறிய மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்களில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது. பெரிய கோவில்கள், வழிபாட்டுத் தலங்களில் அனுமதி கிடையாது.

2. தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் நூறு விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கலாம்.

3. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

4. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும்.

5. அத்தியாவசியமற்ற பொருட்களையும் ஈ - காமர்ஸ் நிறுவனங்கள் விற்பனை செய்யலாம்.

பொதுவான அறிவிப்புகள்

144 தடைச் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும். பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட அனுமதி கிடையாது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக அமலில் இருக்கும்.

பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: