You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு? முதல்வர் எடப்பாடி யோசனை
இன்றைய நாளேடுகளில் வெளியான முக்கியச் செய்திகளைப் பார்ப்போம்.
தினத்தந்தி:
கொரோனா: தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு? முதல்வர் எடப்பாடி யோசனை
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
தற்போது சென்னையில் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற தொடங்கி உள்ளது என்று கூறும் தினத்தந்தி செய்து பின் வருமாறு விவரிக்கிறது.
தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவி வரும் வேளையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் கலந்துகொள்கின்றனர்.
தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சருடன் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
பல மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆய்வுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்டங்களை தொடர்ந்து மதுரையிலும் முழு ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே தொற்றை தடுக்க மேலும் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா? அல்லது மாநிலம் முழுவதுமே முழு ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதா? என்பது இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தெரியவரும்.
இந்து தமிழ் திசை:
மேட்டூரிலிருந்து பூம்புகார் வந்த காவிரி நீரை வரவேற்ற விவசாயிகள்
கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட 8-வது நாளில் காவிரி ஆற்றின் கடைசி கதவணைக்கு நேற்று வந்து சேர்ந்த தண்ணீரை மலர் தூவி விவசாயிகள் வரவேற்றனர் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
அந்நாளிதழ் பின்வருமாறு விவரிக்கிறது,
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைக் கடந்த 12-ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த தண்ணீர் கடந்த 16-ம் தேதி கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், கல்லணையில் திறக்கப்பட்ட 8-வது நாளில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் உள்ள காவிரி ஆற்றின் கடைசி கதவணைக்கு காவிரி நீர் நேற்று வந்தடைந்தது. பொதுப்பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் இருகரம் கூப்பி வணங்கி, மலர் தூவி வரவேற்றனர்.
இங்கு காவிரி நீர் தேக்கி வைக்கப்பட்டு பாசன ஆறுகளுக்கும், கிளை வாய்க்கால்களுக்கும், பெருந்தோட்டம் ஏரிக்கும் பின்னர் திறக்கப்படும். எஞ்சிய தண்ணீர் பூம்புகாரில் கடலில் கலக்கும்.
தினமணி:
தமிழக மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம்
தமிழக மாணவர்களின் நலன்கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
தமிழக மாணவர்களின் நலன்கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழியில் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
http://e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வீடியோ மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு தமிழக அரசு வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: