தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பேருந்து சேவைகள் துவங்கின

தமிழ்நாட்டில் சுமார் இரு மாதங்களுக்குப் பிறகு பெரும்பாலான மாவட்டங்களில் பேருந்துகள் ஓடத் துவங்கியுள்ளன. நோய்த் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் பேருந்து சேவைகள் துவங்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டுவருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தை ஜூன் ஒன்றாம் தேதி முதல் துவக்குவதற்கு ஏதுவாக தமிழ்நாடு 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.

அதன்படி, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் முதலாம் மண்டலம் என்றும் தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் 2ஆம் மண்டலமாகவும் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் 3ஆம் மண்டலமாகவும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் 4ஆம் மண்டலமாகவும் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் 5ஆம் மண்டலமாகவும், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் 6ஆம் மண்டலமாகவும், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் 7ஆம் மண்டலமாகவும், சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் 8ஆம் மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் ஏழாம் மண்டலத்தில் உள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் எட்டாம் மண்டலத்தில் உள்ள சென்னை நகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளும் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே தனியாருக்கு அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில், பணிமனையில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் கொண்டுவரப்பட்டு காலை ஆறு மணி முதல் இயக்கப்பட்டன. மொத்தமாக 330 பேருந்துகள் இன்று இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கும்பகோணம் மண்டலத்தில் இருந்து 7 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்பட்டன.

மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கிய 5வது மண்டலத்தில் 16 போக்குவரத்து பணிமனைகளில் 954 பேருந்துகள் உள்ளன. இவற்றில் சுமார் ஐம்பது சதவீத பேருந்துகள் அதாவது, 373 நகர் பேருந்துகள் மற்றும் 75 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 450 பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறன.

கோயம்புத்தூர் கோட்டத்தில் 1,326 பேருந்துகள் இன்று காலை முதல் இயங்கத் துவங்கியுள்ளன. கோயம்புத்தூரில் மட்டும் 539 பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஒவ்வொரு பேருந்திலும் 60 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது 40 இருக்கை கொண்ட பேருந்துகளில் 26 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 3 பேர் அமரும் இருக்கையில் 2 பயணிகளும் 2 பேர் அமரும் இருக்கையில் ஒரு பயணியும் அமர்ந்து பயணிக்கும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பில் முகக்கவசம் கையுறை மற்றும் பேருந்து பயணிகள் பயன்படுத்த சானிடைசர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்துகளில் ஏறுவதற்கு முன்பாக வெப்பமானிகள் மூலம் பயணிகளுக்கு காய்ச்சல் இருக்கிறதா எனச் சேதிக்கப்படுகிறது.

பேருந்து சேவைகள் துவங்கினாலும் பெரும்பாலான பேருந்துகளில் போதுமான கூட்டம் இல்லை.

தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுபாடுகளுடன் காலை 05.00 மணி முதல் இரவு 09.00 மணிவரரை பேருந்துகள் இயக்கப்படும். மண்டலங்களுக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு 'இ-பாஸ்' தேவையில்லை என்பதால், பொது போக்குவரத்து பஸ்களில பயணிக்கவும் 'இ-பாஸ்' அவசியமில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: