You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை: 'அரசும் அமைச்சர்களும் இரவுபகல் பாராமல் உழைக்கிறார்கள்' - நீதிமன்றத்தில் மத்திய அரசு
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயலும் முயற்சிகளின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பது, உணவு, உறைவிடம் ஆகியவை இல்லாமல் தவிப்பது போன்றவை குறித்த ஊடகச் செய்திகளின் அடிப்படையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இது மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சி மற்றும் சில சமூக செயல்பாட்டாளர்கள் தரப்பிலும் புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை தொடர்பாக சில இடையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக கபில் சிபல், இந்திரா ஜெய்சிங், காலின் கொன்செல்வ்ஸ், சஞ்சய் பாரிக் உள்ளிட்டோர் காணொலிக் காட்சி மூலம் வாதிட்டனர்.
இடைக்கால உத்தரவு
வாதங்கள் நிறைவடைந்த பின்பு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில் பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயணக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் ரயில்வே கட்டணங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணம் தொடங்கும் பொழுது எந்த மாநிலத்தில் பயணம் தொடங்குகிறதோ அந்த மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும். ரயில் பயணத்திபோது இந்திய ரயில்வே அவற்றை வழங்க வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பின்னர் அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அந்த இடைக்கால உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான ரயில் அல்லது பேருந்துக்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதற்கான தகவல்களையும் அவர்கள் சிக்கிக்கொண்டுள்ள மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சொந்த ஊர் திரும்புவதற்கான முன்பதிவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொள்வது மட்டுமல்லாமல் அவர்கள் கூடிய விரைவில் போக்குவரத்து வசதிகளை பெறுவதையும் அந்தந்த மாநில அரசுகள் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன?
உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்து தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள் மிகவும் பிரச்சனைக்கு உரியவையாக இருக்கின்றன. ஊர் திரும்புவதற்காக பதிவு செய்து பல வாரங்கள் அவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. அவர்களுக்கு மத்திய அரசு எவ்வாறு நிதியுதவி செய்கிறது, அவர்கள் இந்த காலகட்டத்தில் ஏதேனும் செலவு செய்யவேண்டிய தேவையுள்ளதா என்றெல்லாம் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிதம் நீதிபதிகள் கேட்டனர்.
இன்றைய வழக்கு விசாரணையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இந்திய அரசு உணவு, உறைவிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்காக என்னை ஏற்பாடுகளை செய்துள்ளது என்று பல்வேறு கேள்விகளை மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரிடம் எழுப்பினர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள்
இன்றைய வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இப்போது நிலவும் சூழல் முன்னெப்போதும் சந்தித்திராத ஒன்று என்றும் இதுவரை சுமார் 91 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 84 லட்சம் உணவுப் பொட்டலங்கள் அவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்றும் கடைசி புலம்பெயர் தொழிலாளர்கள் அவரது சொந்த ஊர் திரும்பும் வரை அரசு இந்த முயற்சிகள் தொடரும் என்றும் அவர் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பலவற்றை செய்து வருகிறது. ஆனால் எதிர்மறையான கருத்துக்களை மட்டுமே தொடர்ந்து பரப்பி வரும் 'அழிவின் தூதுவர்கள்' சிலர் இருக்கிறார்கள். இவர்கள் சமூக ஊடகங்களில் எழுதுகிறார்கள், ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால் அரசு என்ன செய்கிறது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். மாநில அரசுகளும் அமைச்சர்களும் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். ஆனால், அவற்றை ஒப்புக் கொள்வதற்கான நாட்டுப்பற்று இவர்களிடம் இல்லை என்று துஷார் மேத்தா நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் வாதம்
அரசு தரப்பில் என்ன செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யப்பட்ட பின்பே சில வழக்கறிஞர்கள் வாதிட அனுமதிக்க வேண்டும் என்று துஷார் மேத்தா நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
எனினும் பின்னர் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் வாதிடத் தொடங்கினர்.
உச்சநீதிமன்றம் வழக்கறிஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் தனது வாதத்தின்போது, இது ஒரு மனிதாபிமான சிக்கல். இதில் அரசியலுடன் தொடர்பு படுத்துவதற்கு எதுவும் இல்லை, என்று கூறினார்.
அப்போது நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்தக்கூடாது என்றும் நீங்கள் இந்த நெருக்கடிக்கு என்ன எவ்வளவு பங்காற்றியவர்கள் என்றும் துஷார் மேத்தா அவரிடம் கேள்வி எழுப்பினார்.
தாம் 4 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக அப்போது கபில் சிபல் தெரிவித்தார்.
ஒவ்வோர் அமைப்பையும் வாதிட அனுமதித்தால் அனைவரும் இங்கு வந்து வாதிட வேண்டும் என்று விரும்புவார்கள். தேவைப்படும் போது உங்களுடைய சட்ட உதவியை தாங்களே கேட்போம் என்று நீதிபதிகள் அப்பொழுது கபில் சிபலிடம் தெரிவித்தனர்.
அப்பொழுது நான் இங்கு அரசியல் நோக்கத்துக்காக வரவில்லை பதினைந்து நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்வேன் என்று நீதிபதிகளிடம் தெரிவித்த சிபல், "பேரிடர் காலங்களில் போது பேரிடர் மேலாண்மை ஆணையம் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள், சுகாதாரம் உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்துவதற்கான குறைந்தபட்ச உத்தரவாதத்தை அளிக்கும் தேசிய திட்டமொன்றை தயார் செய்ய வேண்டும். அதற்கு பிரதமர் தலைமையிலான குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். இன்றைய தேதி வரை அவ்வாறு எதுவும் தயார் செய்யப்படவில்லை. அதனால்தான் பிரச்சனைகள் அதிகமானது," என்று கபில் சிபல் கூறினார்.
'பேரிடர் மேலாண்மை திட்டம் இந்திய அரசிடம் இல்லை'
"மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் அவ்வாறு எந்த திட்டம் பற்றியும் குறிப்பிடப்படவில்லை. மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் கூட அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை. இன்னும் மீதம் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப மூன்று மாத காலம் ஆகும் என்றால், இங்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன," என்று கேள்வி எழுப்பிய கபில் சிபல் ரயில்களில் வெறும் 3 சதவீத இருக்கைகளில் மட்டுமே தொழிலாளிகள் பயணிக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
''நான்கு கோடி பேர் காத்திருக்கிறார்கள்''
"இந்தியா முழுவதும் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்கான ரயில்களை திருப்பிவிட முடியாது என்று சொலிசிட்டர் ஜெனரல் கூறுகிறார். இந்திய அரசு அலோக் ஸ்ரீவத்சவா வழக்கில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கையையே நாங்கள் கூறுகிறோம். இந்திய ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே நாங்கள் மனு தாக்கல் செய்துள்ளோம்," என மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிட்டார்.
நீங்கள் வீடு திரும்ப விரும்பாதவர்களையும் சொந்த ஊர் திரும்ப தூண்டுகிறீர்கள் என்று அப்போது துஷார் மேத்தா அவரிடம் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அனைவரும் வீடு திரும்புகிறார்கள் என்று நாங்கள் கூறவில்லை எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று தான் கேட்கிறோம் என்று கூறினர்.
தொடர்ந்து வாதிட்ட இந்திரா ஜெய்சிங் (வெளிநாட்டில் இருப்பவர்களை விமானம் மூலம் இந்தியா அழைத்துவரும் ) 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் கால அட்டவணை இந்திய அரசால் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணை இந்திய அரசால் வெளியிடவில்லை என்று கூறினார்.
''வீடு திரும்ப 6 முதல் 8 மாத காலம் ஆகும்''
புலம்பெயர் தொழிலாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காலின் கோன்சால்வ்ஸ் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான தனது ஆலோசனைகளை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறி அவற்றை வாசிக்க தொடங்கினார். ஆனால் அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் வேண்டாம் நாங்களே படித்துக் கொள்கிறோம் என்று கூறினர்.
துஷார் மேத்தாவும் தமக்கு அந்த ஆலோசனைகள் அடங்கிய நகல் ஒன்றே போதும் என்றும் தானே வாசித்து கொள்வதாகவும் கூறினார். தொடர்ந்து வாருங்கள் தற்போது உள்ள சூழலில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் வீடு திரும்ப 6 முதல் 8 மாத காலம் ஆகும் என்று கூறினார் கோன்சால்வ்ஸ்.
இந்த வழக்கு விசாரணையின் போது சில மாநில அரசு தரப்பு வழக்கறிஞர்களும் காணொலிக் காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகினர்.