ராகுல் காந்தி: கொரோனா வைரஸ், சீனா, அமெரிக்கா குறித்து பேசியது என்ன?

''கொரோனாவுக்குப் பிறகு உலகில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் இருக்கும். 9/11 நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு உலகில் புதிய அத்தியாயம் தொடங்கியது. கொரோனாவுக்குப் பிறகு சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான அதிகாரச் சமநிலை மாறும்,'' என்று குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி.

பொது சுகாதார வல்லுநர்கள் ஆஷிஷ் ஜா, ஜான் ஜிசெக் ஆகியோருடன் அவர் இன்று காணொலி வாயிலாக உரையாடினார். அதன்போதே ராகுல் காந்தி இவ்வாறு பேசினார்.

ராகுல் காந்தி வேறு என்ன பேசினார்?

"கொரோனா வைரஸ் பரிசோதனைகளின் அளவு ஏன் குறைவாக இருக்கிறது என நான் சில அதிகாரிகளிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், அதிகமான பரிசோதனை மேற்கொண்டால், மக்கள் அச்சப்பட தொடங்கிவிடுவார்கள் என்கின்றனர். இதனை அதிகாரப்பூர்வமாக என்னிடம் கூறவில்லை. கொரோனாவை எதிர்த்து போராட அதிகளவில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்," என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கைதான் சரி என்று நாம் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கு ஏற்றாற்போல நடவடிக்கையை வைத்திருப்பார்கள். ஒரு சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களைவிட கொரோனா தொற்றை சிறப்பாக கையாள்வதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். அதற்கு அந்தந்த மாநிலங்களின் நடவடிக்கை, அரிசயல் அமைந்துள்ள விதம்தான் காரணம் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

"நாம் ஒரு குறிப்பிடத்தகுந்த வலியை அனுபவிக்க தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வயதானவர்களை கொரோனா வைரஸ் அதிகமாக தாக்குகிறது என்று எனக்கு கவலை இருந்தாலும், எனக்கு இளைஞர்களை நினைத்தாலும் கவலையாக இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் மிகவும் முக்கயம்."

"உலகளவில் இந்த வைரஸ் தொற்று இரண்டு அடிப்படை விஷயங்களை தாக்குகிறது. ஒன்று ஒரு நாட்டின் சுகாதார அமைப்பு மற்றொன் இந்த உலக அமைப்பையை இந்த வைரஸ் மாற்றுகிறது."

சுகாதார வல்லுநர்கள் கருத்து என்ன?

கோவிட்-19 உலகத் தொற்றின் பாதிப்பு குறித்த உரையாடலில் பொது சுகாதார வல்லுநர்கள் ஆஷிஷ் ஜா, ஜான் ஜிசெக் ஆகியோரும் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே ஊரடங்கின் நோக்கம். கொரோனா வைரசை இதற்கு முன்னர் மனித இனம் பார்த்ததே இல்லை. அந்த வகையில் நாம் அனைவருமே தொற்று பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்திற்கு உரியவர்கள்தான். பரிசோதனை செய்யப்படவில்லை என்றால் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஆஷிஷ் ஜா தெரிவித்தார்.

"ஊரடங்கு காலத்தில் நாம் யோசிக்க வேண்டிய முக்கிய விஷயம், ஊரடங்கை எவ்வாறு தளர்த்தப் போகிறோம் என்பது. ஊரடங்கால் கொரோனா பரவுதலை தள்ளிப்போட முடியும். ஆனால் அது தீர்வாகாது. ஊரடங்கு நேரத்தில் பரிசோதனை அதிகப்படுவது, தொற்றாளர்களை கண்டறிவது, தனிமைப்படுத்தும் மையங்களை உருவாக்குவது மிக முக்கியம்."

"ஊரடங்கிற்கு பிறகு வாழ்க்கை முற்றிலும் மாறப்போகிறது. அடுத்த 6, 12, 18 மாதங்களுக்கு வாழ்க்கை வேறு மாதிரி இருக்கும். அதுகுறித்த திட்டமிடுதல் வேண்டும். பொதுப் போக்கவரத்து எப்படி இருக்கப்போகிறது. யாரெல்லாம் மீண்டும் வேலைக்கு செல்வார்கள். பள்ளிகள் என்ன செய்ய வேண்டும். இவையேல்லாம் குறித்து ஊரடங்கு நேரத்தில் சிந்திக்க வேண்டியிருக்கிறது," என்றும் ஆஷிஷ் ஜா தெரிவித்தார்.

'இந்தியப் பொருளாதாரம் நாசமாகும்'

கடுமையான ஊரடங்கை இந்தியா அமல்படுத்தினால் அதன் பொருளாதாரம் நாசமாகும் என்று ஜான் ஜிசெக் குறிப்பிட்டார்.

ஊரடங்கை தளர்த்திவிட்டு வயதானவர்களையும், பாதிக்கப்படும் விளிம்பில் இருக்கும் மக்களையும் பாதுகாப்பது சிறந்த வழி என்று நினைக்கிறேன். பலருக்கு கொரோனாவால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர்களுக்கு இத்தொற்று இருப்பதுகூட தெரிய வராது என்றும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: