டெல்லி கலவரம்: தேவாங்கனா காலிதாவுக்கு பிணை

ஜாஃப்ராபாத் மக்களை கலவரத்தில் ஈடுபட தூண்டியதாக தொடர்ந்த வழக்கில் தேவாங்கனா காலிதாவுக்கு பிணை வழங்கி உள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

பெண் விடுதலைக்காகப் போராடும் 'கூண்டை உடை' என்ற இயக்கத்தின் இரண்டு பெண் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு மே 26ஆம் தேதி இரண்டு நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

முன்னதாக, வடகிழக்கு டெல்லியில் நடந்த வகுப்புவாத வன்முறை தொடர்பான வழக்கில் இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால், ஜாமீன் வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, வேறொரு கொலை வழக்கில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

வகுப்புவாத வன்முறை வழக்கில், நதாஷா நர்வால் மற்றும் தேவாங்கனா காலிதா ஆகிய இருவருக்கும் பெருநகர நீதிபதி அஜித் நாராயண் ஜாமீன் வழங்குவதாக தீர்ப்பளித்தார். உடனே, டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் ஒரு புதிய விண்ணப்பத்தை தாக்கல் செய்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. கலவரங்கள் தொடர்பான கொலை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான மற்றுமொரு வழக்கில் அவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும் என அந்த விண்ணப்பத்தில் அனுமதி கோரப்பட்டது.

‘கூண்டை உடைக்கும்’ பிரச்சார இயக்கத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.

முதல் தகவல் அறிக்கை

டெல்லி காவல்துறை தொடக்கத்தில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், பிப்ரவரி மாதம் டெல்லியின் ஜாபராபாத் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, இந்த இளம் பெண்கள் போலீசாரை செயல்படவிடாமல் தடுத்ததோடு, காவல்துறையின் உத்தரவுகளை மீறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, மற்றவர்களைத் தாக்கியும், சாலை மறியல் செய்து கலவரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

நதாஷா நர்வால் மற்றும் தேவாங்கனா காலிதா ஆகியோருக்கு 20,000 ரூபாய் பிணையில் ஜாமீனில் விடுவித்து பெருநகர நீதிபதி அஜித் நாராயண் உத்தரவிட்டார் .

"குற்றம் சாட்டப்பட்டவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேட்டை மட்டுமே எதிர்ப்பதாகவும், எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடவில்லை என்பதையும் இந்த வழக்கின் உண்மைகள் காட்டுகின்றன. அவர்கள் இந்த சமூகத்துடன் ஆழமான பிணைப்பில் இருக்கின்றனர். நன்கு படித்தவர்கள், விசாரணை தொடர்பாக எல்லாவிதங்களிலும் போலீசாருடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளனர்" என்று நீதிமன்றம் கூறியது.

கோவிட் -19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீஸ் காவலுக்கு அனுப்ப நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை என்பதால், காவலில் எடுக்க வேண்டும் என்று கோரிய காவல்துறையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

ஆனால், நதாஷா நர்வால் மற்றும் தேவாங்கனா காலிதா ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, கலவரத்தில் ஈடுபட்டது, கிரிமினல் சதி செய்தது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய டெல்லி காவல்துறை அவர்களை 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கக் கோரியதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் கூறுகிறது.

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் போலீஸ் காவலுக்கு அனுப்ப வேண்டியது அவசியம் என காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த குற்றச்சாட்டுகள் தவறான நோக்கத்தில் புனையப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டுகளில் வலுவில்லை என்றும் தெரிவித்தார்.

பிப்ரவரி 24 அன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக கூறிய வழக்கறிஞர், போலீஸ் விசாரணைக்கு நதாஷாவும், தேவாங்கனாவும் ஒத்துழைத்து வருவதாக தெரிவித்தார். எனவே, இந்த வழக்கில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்குவதாக நீதிபதி அஜித் நாராயண் தெரிவித்ததும், விசாரணைக்காக கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் போலீசார் இரண்டாம் முறையாக விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர். இருவரும் ஒருசில வழக்குகளில் சந்தேக நபர்கள் என்றும் போலீசார் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

15 நிமிட விசாரணைக்கு பின்னர், இரண்டு இளம் பெண்களையும் 14 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்புமாறு காவல்துறை கோரியது. இந்த வழக்கு கொலை தொடர்பானது என்றும், அதனால் காவல்துறையின் காவலில் விசாரணை நடத்துவது அவசியம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, பிரதிவாதிகளின் வழக்கறிஞரின் எதிர்ப்பையும் மீறி, நதாஷா நர்வால் மற்றும் தேவாங்கனா காலிதா ஆகியோரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்ப நீதிமன்றம் முடிவு செய்தது. கொலை, கொலை முயற்சி, கிரிமினல் சதி,பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது மற்றும் ஆயுதச் சட்டம் தொடர்பாக இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் இருப்பதாக காவல்துறை தெரிவித்தது.

வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 24 அன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தவர்களுக்கும், ஆதரித்தவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில், 53 பேர் இறந்தனர், சுமார் 200 பேர் காயமடைந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: