You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக அரசியல்: திமுக கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்தார்
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வி.பி. துரைசாமி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வி.பி. துரைசாமி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நேற்று, வியாழக்கிழமை, நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி இன்று, வெள்ளிக்கிழமை, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்துவந்த வி.பி. துரைசாமி, 1989லிருந்து 1991வரையிலும் 2006லிருந்து 2011வரையிலும் தி.மு.க. சார்பில் தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் பொறுப்புகளை வகித்தவர்.
இந்த நிலையில், திங்கட்கிழமையன்று பா.ஜ.கவின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு தன் மகனுடன் சென்ற துரைசாமி, அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று ஊடகங்களிடம் பேசிய துரைசாமி, முருகன் தன் ஊரைச் சேர்ந்தவர், சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சென்று சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்ததாகவும் கூறினார்.
மேலும், தி.மு.கவின் செயல்பாடுகள் குறித்து சில கருத்துகளை முன்வைத்த துரைசாமி, மாநிலங்களவைத் தேர்தலில் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டதாகவும் வாய்ப்பு கிடைக்கவில்லையென்றும் கூறியிருந்தார்.
"எம்.பி. பதவிக்காக வயது வித்தியாசம் பார்க்காமல் உதயநிதியை நேரில் சந்தித்துக் கெஞ்சினேன். அது தப்பு இல்லை. ஏனென்றால், கட்சி அவர்களுடையது," என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், துரைசாமி அவர் வகித்துவந்த துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக தி.மு.க. தலைமை அறிவித்தது. அவருக்குப் பதிலாக அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் தனக்கு வாய்ப்பளிக்கப்படும் என துரைசாமி எதிர்பார்த்த நிலையில், அந்தியூர் செல்வராஜிற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலிருந்தே துரைசாமி அதிருப்தியிலிருந்துவந்தார்.
இந்த நிலையில், முரசொலி நாளிதழின் இடம் தொடர்பாக சர்ச்சைகளை ஏற்படுத்திவந்த எல். முருகனை துரைசாமி சென்று சந்தித்ததும், அந்த சந்திப்பு குறித்த செய்திகள் பா.ஜ.க. சார்பில் ஊடகங்களுக்கு அனுப்பட்டதும் கட்சித் தலைமைக்கு ஏற்புடையதாக இல்லையென்று கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: