கொரோனா வைரஸ்: தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தது - முக்கிய தகவல்கள் என்ன?

தமிழ்நாட்டில் மேலும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 83 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள். 557 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத் துறை இன்று மாலையில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி தமிழ்நாட்டில் 660 பேருக்கும் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு வந்த 83 மூன்று பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், 743 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் 557 பேரும் செங்கல்பட்டில் 58 பேரும் காஞ்சிபுரத்தில் 14 பேரும் திருவள்ளூரில் 23 பேரும் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,191ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் 987 பேர் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5882ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்கள், குணமடைந்தவர்கள் போக, தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 7219ஆக உள்ளது.

நேற்று ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 7,466ஆக இருந்த நிலையில், இன்று பெரும் எண்ணிக்கையில் நோயாளிகள் குணமடைந்ததால், இன்று ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 7219ஆக உள்ளது.

இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். திருவள்ளூரைச் சேர்ந்த 44 வயதுப் பெண் ஒருவர் மே 18ஆம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 19ஆம் தேதி மூச்சுத் திணறல், நிமோனியாவால் உயிரிழந்தார்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த 52 வயது ஆண் ஒருவர் 19ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மூச்சுத் திணறலால் உயிரிழந்தார். மேலும், இருதய நோயால் பாதிக்கப்பட்டு, சரியாக சிகிச்சைபெறாமல் இருந்த 70 வயதுப் பெண்மணி ஒருவர், மே 17ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு, 19ஆம் தேதி உயிரிழந்தார்.

கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: