உம்பான் அதி தீவிரப் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது

அதிதீவிரப் புயல் உம்பான் மேற்கு வங்கத்துக்கும் வங்கதேசத்துக்கும் இடையே கரையை கடக்கத் தொடங்கியது.

மேற்கு வங்கத்தின் திகாவுக்கும் வங்கதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கும் இடையே, சுந்தரவனக் காட்டுக்கு அருகே பிற்பகல் 2.30 மணியளவில் உம்பான் கரையைக் கடக்கும் செயல்பாடு தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல் தெரிவிக்கிறது.

சூப்பர் சைக்லோன் ஸ்ட்ராம் என்று ஆங்கிலத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த அதிதீவிரப் புயல் முழுவதும் கரையைக் கடந்து முடிக்க 2 முதல் 3 மணி நேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலில் ‘சுவர் முகில்’ (wall cloud) என்று அழைக்கப்படுவதன் முன் பகுதி நிலப்பரப்புக்குள் நுழைந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உம்பான் கரையைக் கடக்கத் தொடங்கியதை அடுத்து அந்தப் பகுதிகளில் ஏற்படத் தொடங்கியுள்ள பாதிப்புகளைக் காட்டும் படங்களை வெளியிட்டுள்ளது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

இந்தியாவின், ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பாகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வங்கதேசமும் உம்பான் ஏற்படுத்தும் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது.

மேற்கு வங்காளத்தின் கரையோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டுவதுடன், பெருத்த சேதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அண்டை மாநிலமான ஒடிசாவின் கடலோர பகுதிகளிலும் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: