ப.சிதம்பரம்: “மத்திய அரசு அறிவிப்பில் ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏதுமில்லை”

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி: “மத்திய அரசு அறிவிப்பில் ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏதுமில்லை”

மத்திய அரசு அறிவித்த சலுகை திட்டங்களில் ஏழைகளுக்கும், இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஏதும் இல்லை என்று ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் சலுகை தொகுப்பில், லட்சக்கணக்கான ஏழைகளுக்கும், பட்டினியால் வாடிக்கொண்டு, தங்கள் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருக்கிற இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஏதும் இல்லை.

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி பிணையற்ற கடன்களை அறிவித்து இருக்கிறது. ஆனால் மீதமுள்ள ரூ.16.4 லட்சம் கோடி எங்கே? சாதாரணமான சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு சலுகை தொகுப்பை அறிவித்திருக்கிறார்கள், மற்றபடி இந்த அறிவிப்புகள் ஏமாற்றத்தையே தந்துள்ளன.

இந்த அரசை பொறுத்தமட்டில், தனது அறியாமை மற்றும் பயத்தின் கைதியாக இருக்கிறது. அரசு அதிகளவில் செலவு செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு அரசு விரும்பவில்லை. அரசு கடன் வாங்க வேண்டும். அதை செய்வதற்கும் அரசிடம் விருப்பம் இல்லை.

முதலில் மத்திய அரசு செய்ய வேண்டியது என்னவென்றால், அடித்தட்டில் உள்ள 13 கோடி குடும்பங்களின் கைகளில் பணத்தை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரம் கொடுத்தால், இதற்கு அரசுக்கு ஆகிற செலவு ரூ.65 ஆயிரம் கோடிதான்.

கொரோனா பிரச்சினையில், மத்திய அரசு துறை வாரியாக நிதி உதவியை வழங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்: “30 ஆயிரம் இந்தியர்களை தாயகம் அழைத்துவர திட்டம்”

வெளிநாடுவாழ் இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் இந்திய அரசின் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 30 ஆயிரம் பேரை மீட்க திட்டமிடப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பேட்டி அளித்துள்ள மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங், வரும் மே 16ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை செயல்படுத்தப்படவுள்ள இரண்டாம் கட்டத்தில் 149 சிறப்பு விமானங்களின் மூலம் 31 நாடுகளில் வாழும் சுமார் 30 ஆயிரம் இந்தியர்களை தாயகம் அழைத்து வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதல் கட்டத்தில், 64 விமானங்களின் மூலம் 12 நாடுகளில் வாழ்ந்து வந்த சுமார் 15 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: “ஜூன் 30 வரை பயணிகள் ரயில்கள் ரத்து?”

நாடு முழுவதும் அட்டவணைப்படி இயக்கப்படும் பயணிகள் ரயில்களை, ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை இயக்குவது இல்லை என ரயில்வே அமைச்சகம் உத்தேசித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லாத ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என 13,100 ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டது.

அண்மையில் ரயில் போக்குவரத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் அட்டவணைப் படி, ஜூன் 30-ஆம் தேதி வரை இயக்கப்படும் அனைத்து ரயில்களுக்கான, முன்பதிவுக் கட்டணத்தை முழுவதுமாக திருப்பிச் செலுத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம், ஜூன் 30-ஆம் தேதி வரை, முன்பதிவு செய்யும் வசதியுடைய பயணிகள் ரயில் இயங்காது எனத் தெரிகிறது” என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: