கோயம்பேட்டில் கொரோனா வைரஸ்: "அரசு சொன்னதைக் கேட்காததால்தான் கோயம்பேட்டிலிருந்து தொற்று ஏற்பட்டது"

கோயம்பேட்டில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் குவிவதால், தற்காலிக இடத்திற்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை வியாபாரிகள் ஏற்கவில்லை; இதன் காரணமாகவே அங்கிருந்து பெரும் எண்ணிக்கையில் தொற்று பரவியது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதில் கொரோனோ தடுப்புக்காக தனது அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு முயற்சிகளைக் குறிப்பிட்டார்.

"வேளாண்மைக்கு ஏற்கனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. விளைபொருட்களை எடுத்துச் செல்ல தடையில்லை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளை சந்தைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் அதிகாரிகள் ஆலோசனைகளின்படி கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன.

எங்கேயுமே உணவுப் பிரச்சனை கிடையாது. மருத்துவ சிகிச்சை அளிப்பதில் நாம் இந்தியாவிலேயே முதன்மையாக விளங்குகிறோம். நோய் அறிகுறி தென்பட்டவுடன் சிகிச்சை பெற்றால் அவர்கள் முழுமையாக குணமடைந்துவிடுகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களால் இந்த நோய் பரவல் அதிகமாக ஏற்பட்டுள்ளது.

இந்த நோய்ப் பரவலை தடுக்க அரசு எடுத்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது. மருத்துவமனையில் சேர்ந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். வாழ்வாதாரத்திற்காக ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்திற்குச் சென்று பணிபுரிந்து, தொற்று ஏற்பட்டவுடன் சொந்த மாவட்டத்திற்கு திரும்பியதால் கொரோனா எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், விழுப்புரம், அரியலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னைக்கு வந்து பணிபுரிந்துவந்தார்கள். அவர்கள் சொந்த ஊருக்குச் சென்றபோது, பரிசோதனை செய்தபோது, அவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இன்னும் 3-4 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த மாவட்டங்களுக்குச் சென்றவர்களுக்கு முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சையளிக்கப்படும்.

சென்னையில் அதிக அளவில் நோய் பரவுவதற்கு காரணம், இங்கு அதிக நெருக்கமாக மக்கள் வசிக்கிறார்கள். குடிசைப் பகுதிகளில் மட்டும் 26 லட்சம் பேர் வசிக்கிறார்கள். ஆகவே எளிதில் நோய்த் தொற்று ஏற்படுகிறது.

சென்னையில் ஆசியாவிலேயே மிகப் பெரிய மார்க்கெட்டான கோயம்பேடு மார்க்கெட் இயங்கிவந்தது. இங்கு வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், சரக்கு ஏற்றும் தொழிலாளர்கள் என 20,000 பேர் பணிபுரிகிறார்கள். இங்கு தொற்று ஏற்படும் என சிஎம்டிஏ அதிகாரிகள் மார்ச் 19ஆம் தேதியே வியாபாரிகளை அழைத்து பேசினார்கள். அரசு மாற்று ஏற்பாடு செய்துகொடுக்கும் என சொன்னார்கள்.

ஆனால், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். நாங்கள் இங்கேதான் செய்வோம் என்று சொல்லிவிட்டார்கள். வேறு பகுதிகளுக்கு சென்றால் நஷ்டம் ஏற்படும் என்றார்கள். அரசு அமைக்கக்கூடிய தற்காலிக மார்க்கெட்டிற்கு செல்லவிரும்பவில்லை என்றார்கள்.

துணை முதல்வர் மார்ச் 29ஆம் தேதி நேரடியாக கோயம்பேடு மார்க்கெட்டை பார்வையிட்டார். சங்க நிர்வாகிகளிடம் பேசினார். மக்கள் அதிகமாக குழுமுகிறார்கள்; அரசு ஒதுக்கும் இடத்திற்கு சென்றுவிடுங்கள் என்று சொன்னார். அவர்கள் ஏற்கவில்லை. ஏப்ரல் 6ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அரசு அமைக்கும் தற்காலிக மார்க்கெட்டிற்கு செல்ல வேண்டுமென்று சொன்னார். ஆனால், வியாபாரிகள் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்ற அச்சத்தில் அரசு சொன்ன கருத்தை ஏற்கவில்லை. பிறகு ஏப்ரல் 11ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் காய்கறி மார்க்கெட்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன; கோயம்பேட்டில் யாரும் முகக் கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளி விடுவதில்லை என்பதெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போதும் அவர்கள் கேட்கவில்லை.

மீண்டும் ஏப்ரல் 24ஆம் தேதியும் இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காவல்துறை ஆணையர், வேளாண் துறை செயலரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அரசு கடும் முயற்சி எடுத்தது. ஆனால், வியாபாரிகள் வேறு இடத்திற்குச் சென்றால் வியாபாரம் பாதிக்கப்படும் என்ற எண்ணத்தில் இருந்துவிட்டதால்தான் இந்தப் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது.

இங்கிருந்து வெளி மாவட்டத்திற்குச் சென்றதால்தான், அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. அரசைப் பொறுத்தவரை, இந்த கொரோனா பரவலைத் தடுக்க கடும் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்தவர்கள் வேறு இடத்திற்கு செல்ல மறுத்தார்கள்.

ஆகவே நோய்ப் பரவல் ஏற்பட்டவுடன் மார்க்கெட் மூடப்பட்டது. பிறகு வியாபாரிகள் அதனை ஏற்றார்கள். திருமழிசை பகுதிக்குச் செல்ல ஒப்புக்கொண்டுவிட்டார்கள். மே 10ஆம் தேதி முதல் அந்த மார்க்கெட் நடந்து வருகிறது.

அரசு நடவடிக்கை எடுக்காததால், நோய் பரவிவிட்டதாக ஊடகங்களில் வரும் செய்திகள் தவறு. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அங்கிருந்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தொழில் பாதிக்கப்படும் என்பதால் தற்காலிக மார்க்கெட்டிற்கு செல்ல மறுத்தார்கள். இதுதான் உண்மை.

வெளி மாநிலத் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த மாநிலத்திற்குச் செல்ல விரும்பினால், அவர்களது பயணக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கிறது. ஆனால், ரயில்கள் குறைவாக இருப்பதால், அவர்களை அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஆகவே அவர்கள் பொறுமை காக்க வேண்டும். வெளிமாநிலத்தில் பணி புரியும் தொழிலாளர்களை தமிழகத்திற்கு படிப்படியாக அழைத்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் பாதிப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து, பிற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். அரசு அறிவித்துள்ள கடைகள் துவங்கலாம். ஏற்கனவே விதிமுறைகளை மீறியதால் சீல் வைக்கப்பட்ட கடைகளை மூன்று நாட்களுக்குப் பிறகு திறக்கலாம்" என முதலமைச்சர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: