You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விழுப்புரம் சிறுமியை எரித்துக் கொன்றது ஏன் - கைதானவர்கள் வாக்குமூலம்
விழுப்புரம் மாவட்டத்தில் பெற்றோர் மீது இருந்த முன்விரோதம் காரணமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியைக் கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி இருவர் எரித்த அதிமுக பிரமுகர்கள் சிறுமியை எரித்தது ஏன் என காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில், சிறுமி கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக பிரமுகர்கள் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரையும் அன்றிரவே விழுப்புரம் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று, திங்கள், காலை உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்தனர்.
சிறுமியைத் அதிமுக நிர்வாகிகள் தீயிட்டுக் கொளுத்தியது தொடர்பாக 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கத் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு நேற்று உத்தரவிட்டது.
சிறுமியைத் தீயிட்டு எரித்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது நாங்கள்தான் எனக் கைது செய்யப்பட்ட முருகன் மற்றும் கலியபெருமாள் காவல் துறை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர் என்கிறது காவல்துறை.
எதற்காகச் சிறுமியை எரித்தோம் என்று அவர்கள் வாக்குமூலமும் அளித்துள்ளனர்.
"அவர்களுக்குள் பல வருடங்களாக முன் விரோதம் இருக்கிறது. இதனால் இவர்கள் இரு தரப்பினரிடையே நிறையச் சண்டைகள் நேர்ந்துள்ளது. 7 வருடங்களுக்கு முன்பு, சிறுமியின் தந்தை ஜெயபாலின் தம்பியின் கையை குற்றவாளிகள் வெட்டியுள்ளனர். முன்னதாக, கலியபெருமாள் வீட்டின் அருகே ஒரு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து 2010 ஆண்டிலிருந்து ஜெயபால் விவசாயம் செய்து வந்துள்ளார். அதையடுத்து, அந்த நிலத்தை விட்டுக்கொடுக்குமாறு முருகன் தகராறு செய்துள்ளார். இதனால், இவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால், இவர்கள் ஜெயபாலை தாக்கியும் இருக்கின்றனர்," என்றார் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்.
"இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை இரவு ஜெயபால் கடைக்குப் பீடி வாங்கவந்த பிரவீன்குமார் என்பவர் அவரது பெரிய மகனைத் தாக்கியுள்ளார். இந்த பிரச்சனை முருகன் மற்றும் கலியபெருமாள் தூண்டுதலின் பேரில் நடைபெற்றதென்று மறுநாள் காலை அவர்கள் மீது புகார் கொடுக்க திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்."
"இதையறிந்த முருகன் மற்றும் கலியபெருமாள் எங்கள் மீது புகார் கொடுக்க செல்கிறாயா என்ற கோபத்தில் ஜெயபால் வீட்டிற்குச் சென்றபோது கடையில் சிறுமி இருந்துள்ளார். அந்த சிறுமி முன்னதாகவே எங்களுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளுக்கு அதிகமாக வாய் பேசும். ஆகவே, வீட்டில் சிறுமி மட்டும் இருக்கவே, அச்சிறுமியின் வாயடைத்துக் கட்டிப்போட்டு எரித்துவிட்டோம் எனக் குற்றவாளிகள் கொலைக்கான வாக்குமூலம் கொடுத்துள்ளதாக," எனத் தெரிவித்துள்ளார் காவல் கண்காணிப்பாளர்.
பிற செய்திகள்:
- 'ஊரடங்கால் ஏழைகள் பட்டினி; இன்னலில் வெளிமாநில தொழிலாளர்கள் ' - குஜராத் நீதிமன்றம்
- "என்னுடைய ரயில் எப்போது வரும்?": சென்னை சென்ட்ரலில் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள்
- "தமிழ்நாட்டுக்கு வந்தாலே போதும் எனத் தோன்றியது" - கடற்படையால் மீட்கப்பட்ட தமிழர்கள்
- குடும்பத்தைக்கூட கவனிக்க முடியாமல் கொரோனாவுடன் போராடும் செவிலியர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: