You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏழைகள் பட்டினி; இன்னலில் வெளிமாநில தொழிலாளர்கள் ' - குஜராத் நீதிமன்றம்
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்து குஜராத் உயர் நீதிமன்றம் திங்களன்று தாமாக முன்வந்து விசாரித்தது.
குடிமக்கள் பட்டினி கிடக்காமல் இருப்பதை உறுதிசெய்வது அரசு அதிகாரிகளின் தலையாய கடமை என்று நீதிபதிகள் பி.பி. பார்திவாலா மற்றும் இலேஷ் வோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையின்போது தெரிவித்தது.
"மக்கள் பெரும்பாலும் பட்டினி கிடப்பதாகத் தெரிகிறது. அவர்கள் உணவும் உறைவிடமும் இன்றித் தவிக்கின்றனர். இதுதான் இந்த ஊரடங்கின் வெளிப்பாடாக இருக்கிறது," என்று அப்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.
"தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களிடம் இருந்து ஏழை மக்கள் பெற்ற மிகச்சிறிய அளவிலான உதவிகளும் தற்போது கிடைக்கவில்லை. ஊரடங்கு அமலான பின்பு அவர்களுக்கு உணவளித்து வந்த தன்னார்வலர்களும் இப்போது உணவு வழங்குவதை நிறுத்தி விட்டனர்" என்று அந்த அமர்வு தெரிவித்தது.
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
"நிலைமை எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. நிலைமையை சரிசெய்ய தங்களால் ஆனதை மாநில அரசு செய்து வந்தாலும் எங்கேயோ எதுவோ தவறாகி விடுகிறது. மாநில அரசின் பல்வேறு துறைகளுக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்பது போலத் தோன்றுகிறது. இப்போதைய சூழலில் மிகவும் அவசியமானது மனித நேயத்துடன் செயல்படுவதுதான்," என்று நீதிபதிகள் விசாரணையின்போது தெரிவித்தனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து நீதிமன்றம் கவலை
வெளிமாநிலங்களில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் நிலைமை குறித்த செய்திகளையும் நீதிபதிகள் விசாரணையின்போது சுட்டிக்காட்டினர்.
"இருப்பதிலேயே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள்தான் என்பது போல தோன்றுகிறது.தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப அவர்கள் மிகவும் போராடுகிறார்கள். தங்களின் சிறு குழந்தைகளுடன் நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் மாநில நெடுஞ்சாலைகளில் நடந்து செல்வதை அனுதினமும் பார்க்க முடிகிறது. அவர்களுடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அவர்கள் மிகவும் மனித தன்மையற்ற மற்றும் அபாயகரமான சூழலில் வாழ்கின்றனர். இதை நிவர்த்தி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அவர்களின் இன்னல்களை போக்குவதற்காக வழிமுறைகளையும் உருவாக்க வேண்டும்," என்று அப்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.
ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் வெளி மாநிலத் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் மாநில அரசின் முயற்சிகளை பாராட்டிய நீதிபதிகள் அவர்கள் பேருந்துகளில் அல்லது ரயில்களில் ஏறுவதற்கு முன்பு சுமார் 45 டிகிரி வெப்பத்தில் பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தனர்.
இவற்றை தவிர்த்து அவர்களின் பயணங்களை எளிதாக்குவதற்கான நடைமுறைகளை மாநில அரசு வகுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
'பட்டினியால் இறப்போம் என்ற பயம்'
"சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் மக்கள் தற்போது அனுபவித்து வரும் இன்னல்களையும் மாநில அரசு மனதில் கொள்ள வேண்டும். அவர்கள் அனைவரும் பயத்தில் உள்ளனர். அவர்கள் கோவிட்-19 தொற்று காரணமாக பயத்தில் இல்லை; பட்டினியால் இறந்து விடுவோம் என்று அவர்கள் பயப்படுகின்றனர்," என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மோசமான பாதிப்பு அதிகமுள்ள இத்தகைய சூழலில் அரசாங்கம் தங்களைப் பார்த்துக் கொள்ளும் எனும் நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்கும் வகையில், அதிகாரிகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
மாநில அரசின் அன்றாட செயல்பாடுகளில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும் தற்போது இருக்கும் மோசமான சூழல் மிகவும் மோசமானதாக மாறிவிடாமல் இருப்பதற்காகவே நீதிமன்றம் தலையிட வேண்டியுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அகமதாபாத் நகரம், அதன் புறநகர்ப் பகுதிகள் மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள பிற பகுதிகளில்உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அமர்வு அறிவுறுத்தியது.
பிற செய்திகள்:
- "என்னுடைய ரயில் எப்போது வரும்?": சென்னை சென்ட்ரலில் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள்
- சீறிப்பாயும் வேலையின்மை: இந்தியாவிலேயே புதுவை, தமிழகம் முதலிடம் - என்ன ஆனது?
- "தமிழ்நாட்டுக்கு வந்தாலே போதும் எனத் தோன்றியது" - கடற்படையால் மீட்கப்பட்ட தமிழர்கள்
- குடும்பத்தைக்கூட கவனிக்க முடியாமல் கொரோனாவுடன் போராடும் செவிலியர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: