கொரோனா வைரஸ்: சென்னையில் கோவிட்-19 தொற்று அதிகம் பரவுவது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அரசின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று (மே 5) மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

சென்னையில் அதிக மக்கள் தொகை வசிக்கும் குறுகலான தெருக்கள் இருப்பதோடு, பொது கழிவறை பயன்பாடு அதிகம் இருப்பதால் நோய் தொற்று அதிகமாக பரவுவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

சென்னை நகரத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மருத்துவர்கள் அடங்கிய பத்து குழுக்கள் மூலமாக பணிகள் செம்மையாக நடைபெற்று வருகின்றது என்று குறிப்பிட்ட முதல்வர், சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது என்றார்.

நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மூன்று வேளையும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது என்றார்.

''சென்னையில் 4,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் இதுவரை 19 நபர்கள் இறந்துள்ளனர். 267 நபர்கள் குணமடைந்துள்ளனர் என்பதால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்பதை காட்டுகிறது.

சென்னை மாநகரத்தில் கொரோனா தாக்கத்தை குறைப்பதற்காக சிறப்பு கட்டுப்பாடு அறை உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு நடமாடும் பரிசோதனை மையம் வீடுகளுக்கு சென்று மாதிரிகளை சேகரிக்கும் பணியும் நடைபெறுகிறது. சோதனைகள் அதிகமாக இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பிற மாநிலங்களை விட தமிழகத்தில் பரிசோதனைகள் அதிகம் செய்யப்படுகின்றது,'' என்றார் முதல்வர்.

தமிழகம் முழுவதும், அம்மா உணவகத்தில் ஒவ்வொரு நாளும் ஏழு லட்சம் நபர்களுக்கு உணவளிப்பதாக கூறிய முதல்வர்,சமூக நலக்கூடங்களில் இரண்டு லட்சம் நபர்களுக்கு உணவளிக்கப்படுகிறது என்பதால், பட்டினி என்ற நிலை தமிழகத்தில் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். பொது மக்களுக்கு ஜூன் மாதம் வரை ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிற மாநில தொழிலாளர்கள் குறித்து பேசிய அவர், ''வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50,000 பேர் தமிழகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களை நேரடியாக சந்தித்து, கணக்கெடுத்து, அவர்களில் விருப்பம் உள்ளவர்கள் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துவருகிறது. தொழிலாளர்கள் தங்கியுள்ள இடத்தில் கணக்கெடுப்பு நடத்தி, அங்கிருந்து ரயில் நிலையத்திற்கு அதிகாரிகள் கூட்டிச் செல்வார்கள் என்பதால் அவர்கள் அரசு அலுவலகங்களுக்கு வரவேண்டாம்,'' என்றார்.

பொது மக்கள் முகக்கவசத்தை கட்டாயம் அணியவேண்டும் என்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: