காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதற்கான காரணம் குறித்து தமிழக பொதுப் பணித் துறை விளக்கமளித்துள்ளது.
காவிரி நீரை, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வது தொடர்பாக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், தீர்வின் ஒரு பகுதியாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டது. இது தன்னிச்சையான அதிகாரங்களைக் கொண்டதாக இருக்குமென்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மத்திய ஜலசக்தி ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்படுவதாக இந்திய அரசிதழ் அறிவிப்பு ஒன்று கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் நகல்கள் நேற்று வெளியானது.
இதையடுத்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இது ஆணையத்தின் தன்னிச்சையான செயல்பாட்டை பாதிக்கும் செயல் என எதிர்ப்புத் தெரிவித்தன.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில் இது தொடர்பாக மாநில பொதுப் பணித்துறை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதன்படி, இது வெறும் நிர்வாக நடவடிக்கையே தவிர, இது ஆணையத்தின் செயல்பாட்டை எவ்விதத்திலும் பாதிக்காது எனக் கூறியுள்ளது.
இது தொடர்பாக பொதுப் பணித் துறை அளித்துள்ள விளக்கத்தில், "காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது குறித்த அறிவிப்பை, 2018 ஜூன் 1ஆம் தேதி மத்திய நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு, கங்கை புனரமைப்பு அமைச்சகம் வெளியிட்டது. ஆணையத்தின் அதிகாரமும் பணிகளும் காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இறுதி உத்தரவின்படிதான் இருக்குமென தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
காவிரி நீர் மேலாண்மை வாரியம் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் படுகை மாநிலங்களை அது கட்டுப்படுத்துமென்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு இதில் தலையிட முடியாது.
2019ஆம் ஆண்டு மே மாதம் மத்திய நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு, கங்கை புனரமைப்பு அமைச்சகமும் குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகமும் ஒன்றாக இணைக்கப்பட்டன. அதன் பெயர் ஜல்சக்தி அமைச்சகம் என மாற்றப்பட்டது.
இந்த ஜலசக்தி அமைச்சகத்தின் கீழே வரக்கூடியவை எவையெல்லாம் என தற்போது பட்டியிலப்பட்டுள்ளன. அதன்படி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியங்கள், காவிரி நீர் மேலாண்மை வாரியங்கள் ஆகியவை இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ளவையாக வருகின்றன.

பட மூலாதாரம், INDIAPICTURES
இது முற்றிலும் ஒரு நிர்வாக நடவடிக்கை. இந்த ஆணையங்களின் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் உள்ளிட்ட இதர நிர்வாகத்தை மேற்கொள்வதற்கான வழக்கமான ஒரு நடைமுறை. இதனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இருக்காது.
மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும் இது தொடர்பாக பேசி, உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளின் நலனுக்கு எந்த பாதிப்பும் இருக்காது" எனக் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- பெண்ணை விற்க ஃபேஸ்புக் விளம்பரம் - மீட்கப்பட்டது எப்படி?
- 'வேற்று கிரக வாசிகள்' - விவரிக்க முடியாத நிகழ்வுகளின் காணொளிகளை வெளியிட்ட அமெரிக்கா
- இளம் வயதில் நடிப்புத்துறையில் இருந்து விலக நினைத்த இர்ஃபான் கான் சாதித்தது எப்படி?
- இந்திய பொருளாதாரத்தை காக்க மே 3க்கு பின் அரசு என்ன செய்ய போகிறது? #BBCExclusive
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












