கொரோனா வைரஸ்: ‘ரேபிட் டெஸ்ட் கிட்களை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம்’ - ICMR

இந்திய மாநிலங்கள் அனைத்தும் இரண்டு நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் சோதனை முடிவுகளில் பல மாற்றங்கள் தெரிவதால் மாநிலங்கள் ரேபிட் டெஸ்ட் கிட்களை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்றும், இதுகுறித்த ஆலோசனைகள் இரண்டு நாட்களில் வழங்கப்படும் எனவும் இன்று (ஏப்ரல் 21)செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் காங்காகேட்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 4 லட்சத்து 49,810 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று மட்டும் 35 ஆயிரத்து 852 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18601ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3252 பேர் இந்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். எனவே இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் சராசரி 17.48 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது என இன்று செய்தியாளார்களை சந்தித்த சுகாதாரத் துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் 1329 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், 44 உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தன்னார்வலர்களின் தகவல்கள்

Covidwarriors.gov.in என்ற வலைதள முகவரியில் 1.24 கோடி மருத்துவ பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 59 மாவட்டங்களில் 14 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: