இந்தியாவில் கொரோனா வைரஸ்: நாளை முதல் ஓரளவு தளர்த்தப்படும் ஊரடங்கு - எங்கு, எப்படி?

இந்தியாவில் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது.இந்திய அரசு அதிகாரிகள் கொரோனா வைரஸ் குறித்த தினசரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த முக்கிய தகவல்களை தொகுத்துள்ளோம்.

  • இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 15,712 ஆக உயர்ந்துள்ளது.
  • பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 507 பேர் உயிரிழந்துள்ளனர்; 2231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று இந்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
  • நேற்று சனிக்கிழமையை விட, இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை 27 அதிகரித்துள்ளது; தொற்று உண்டானவர்கள் எண்ணிக்கை 1334 அதிகரித்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனாவால் உண்டாகும் இறப்பு விகிதம் 3.2% ஆகவும், குணமடையும் விகிதம் 14.19% ஆகவும் உள்ளது. இது நேற்றைய 13.85%-ஐ விடவும் அதிகம்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 37,173 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் இதுவரை ஒட்டுமொத்தமாக 3,86,791 பேருக்கு அந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் ராமன் கங்காகேத்கர் தெரிவித்தார்.
  • புதுச்சேரியின் மாஹே மற்றும் கர்நாடகாவின் கொடகு ஆகிய மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக புதிதாக தொற்று உண்டாகவில்லை.
  • 23 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக புதிதாக தொற்று உண்டாகவில்லை .
  • கண்டய்ன்மெண்ட் ஸோன்ஸ் (Containment zones) எனப்படும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் நாளை, ஏப்ரல் 20, முதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படும். வேளாண் நடவடிக்கைகள், கிராமப்புற பொருளாதாரம் ஆகியவற்றுக்கு உதவ இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் லாவ் அகர்வால்.
  • இதன்படி ஒருவர் மட்டும் இரு சக்கர வாகனத்தில் செல்வது, இருவர் மட்டும் காரில் செல்வது , மருந்து, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் திறப்பது, கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவை அனுமதிக்கப்படும். ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தால், மீண்டும் முழு ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்படும்.
  • 3600 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா கோவிட்-19 தொற்றுள்ள மாநிலங்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் டெல்லி மற்றும் தமிழகம் உள்ளன.
  • இதனிடையே, இந்தியாவின் உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகள் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக மட்டும் அனுமதிக்கலாம் என்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை விநியோகிக்க அவர்கள் இயங்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: