தமிழ்நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று - அதிகரிக்கும் குணமடைவோர் எண்ணிக்கை

தமிழகத்தில் புதிதாக 49 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் 82 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,372ஆக உயர்ந்துள்ளது என்றும் விரைவாக சோதனைகளை மேற்கொள்ள 'ரேபிட் டெஸ்ட் கிட்களை' தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக புதிதாக தொற்று உள்ள நபர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றும் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று இருப்பதை கண்டறிய 31 ஆய்வு மையங்கள் இயங்குகின்றன என்று கூறிய அமைச்சர், ''சளி, காய்ச்சல் இருப்பவர்கள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துகிறோம். உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி சரியான பாதையில் செல்வதால், புதிதாக தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது,'' என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத், தமிழக அரசுக்கு 36,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் கிடைத்துள்ளன என்று குறிப்பிட்டார்.

''இதுவரை கொரோனா பரிசோதனை செய்வதற்கு பிசிஆர் முறை பின்பற்றப்பட்டது. நோய் தொற்று ஏற்பட்டுள்ள நபர்களை விரைவில் கண்டறிய தமிழக அரசு ஐந்து லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களை ஆர்டர் செய்திருந்தது. தற்போது 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் நமக்கு வந்துவிட்டன. அதோடு, மத்திய அரசும் நமக்கு 12,000 கிட்கள் கொடுத்துள்ளது. மொத்தமாக 36,000 டெஸ்ட் கிட்கள் நம்மிடம் இருப்பதால் சோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன,'' என்றார் உமாநாத்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: