You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கொரோனா ஊரடங்கு தொடர்பாக தமிழக முதல்வரால் ஏன் முடிவெடுக்க முடியவில்லை?'
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, ஒடிஷா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக தலைமை செயலர் சண்முகம் பிரதமர் மோதி வெளியிடவுள்ள அறிவிப்பை பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்று கூறினார்.
தன்னிச்சையாக எந்த முடிவையும் முதல்வரால் எடுக்க முடியவில்லையா என கேள்வி எழுப்பி பலரும் அவரை ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள்.
#whoareyouedappadi என்ற ஹேஷ்டேகும் தமிழக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. பிற மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்கான முடிவை தாங்களே எடுக்கும் நேரத்தில் தமிழக முதல்வர் அவ்வாறு எடுக்கவில்லை என ட்விட்டர் வாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.
"மற்ற மாநில முதல்வர்கள் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அறிக்கை விடும் நேரத்தில் இன்று தமிழ்நாட்டில் தலைமை செயலர் அதை பிரதமர் மோதி அறிவிப்பார் என்றால் நீங்கள் யார் எடப்பாடி அவர்களே??" என்று ஒரு ட்விட்டர் வாசி குறிப்பிட்டுள்ளார்
"துப்பட்டா, துண்டு கூட முகக்கவசம்தான்"
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்றும் வெளியிடங்களில் இருக்கும்போது, குறைந்தபட்சம் கைகுட்டை, துப்பட்டா, துண்டு அல்லது அங்கவஸ்திரம் போன்றவற்றை முகத்தை மூடிக்கொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
பீலா ராஜேஷ் பதிவிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ஒவ்வொவரு நாளும் பயன்படுத்தும் உடைகளில் தூய்மையான துணியை முகக்கவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். சோப்பால் துவைத்து, சூரிய ஒளியில் உலர்த்திய துணியை முகக்கவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீட்டில் உள்ள துணியில் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் தூய்மையானதாக இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் பொது மக்கள் தங்களது உடல்நலனில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் தாங்களாகவே மருந்துகளை மருந்துக்கடைகளில் வாங்கி உட்கொள்ளக்கூடாது என்றும் பீலா ராஜேஷ் அறிவுறுத்தியுள்ளார். இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்றும் பயணிக்கும்போது முகக்கவசம் அணிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 911 ஆக உள்ளது.
இந்நிலையில், அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது, எதிர்க்கட்சித் தலைவரின் சந்தர்ப்பவாத அரசியலையே காட்டுகிறது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்பாக "அரசு எதுவும் செய்யவில்லை என்பது போல் சித்தரித்து, பரிந்துரை செய்கிறேன் என்ற பெயரில், அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது எதிர்க்கட்சித் தலைவரின் சந்தர்ப்பவாத அரசியலையே காண்பிக்கிறது "என தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்யுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இந்நிலையில், சனிக்கிழமையன்று பிரதமருடன் காணொளி வாயிலாக நடந்த சந்திப்பில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழகத்தில் எடுத்துவரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்த முதல்வர் பழனிசாமி, கொரோனா சோதனையை நடத்த தேவைப்படும் ரேப்பிட் டெஸ்ட் கிட் விரைவாக அளிக்கப்படவேண்டும் உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இரண்டு லட்சம் கிட்கள் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு ரூ.510 கோடி நிதி ஒதுக்கியதற்கு பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் பழனிசாமி, மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழகத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மாநிலங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்குவதில் 15வது நிதிக்குழுவின் வரைமுறையே தவறாக உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு 120.33 சதவீதம் தமிழகத்திற்கு மட்டும் 64.65 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: