கொரோனா வைரஸ்: ஊரடங்கு நீட்டிப்பு கோரிக்கை, பிறந்த நாள் கொண்டாடிய பா.ஜ.க எம்.எல்.ஏ - சில தகவல்கள்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் கொரோனா வைரஸ் தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தை இன்று நடத்தினார்.

இந்தக்கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

அதில் பல மாநில முதல்வர்கள் ஊரடங்கு உத்தரவை நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வலியுறுத்தி உள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உள்ளிட்ட பலரும் இந்தியாவில் ஊரடங்கை நீட்டிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் பகிர்ந்துள்ள ட்வீட்டில், ''நாட்டின் முடக்க நிலையை நீடிப்பது என்ற நல்ல முடிவை பிரதமர் நரேந்திர மோதி மேற்கொண்டிருக்கிறார். மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலைமை சற்று சிறந்ததாகவே உள்ளது. ஏனெனில் இந்தியா சற்று விரைவாகவே முடக்க நிலையை பின்பற்றியது. தற்போது உடனே இதை பின்வாங்குவது நல்ல யோசனை அல்ல. எனவே ஒருங்கிணைந்த நன்மைக்காக இந்த முடக்க நிலையை நீடிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை சமூக முடக்கம் நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.

அதுபோல மேற்கு வங்கத்திலும் ஜூன் 10 வரை பள்ளிகள் இயங்காது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

அடுத்த 15 தினங்களுக்கு ஊரடங்கை நீடிக்க தங்களுக்கு ஆலோசனைகள் வருவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறி உள்ளார். அதுபோல ஊரடங்கு விஷயத்தில் நாம் எந்த சமரசமும் செய்யக் கூடாது என பிரதமர் கூறி உள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1035 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 7447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 239ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கை நீடிப்பது மிக முக்கியம். நாம் மட்டும் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்திருக்காவிட்டால் 8.2 லட்சம் பேர் கொரோனாவால் இந்நேரம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்கிறார் சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால்.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ ஜெயராம் கூட்டத்தைக் கூட்டி பிறந்தநாள் கொண்டாடியது சர்ச்சையாகி உள்ளது.

கர்நாடக மாநிலம் துருவகேரா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ மசாலே ஜெயராம் நேற்று நண்பர்களை கூட்டி தும்கூரு அரசுப் பள்ளியில் விமரிசையாக பிறந்தநாள் கொண்டாடி உள்ளார். எம்.எல்.ஏ-வுக்கு அவருக்கு நெருங்கியவர்கள் கேக் ஊட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

கொரோனா வைரஸ்: ஊரடங்கு நீட்டிப்பு, பிறந்த நாள் கொண்டாடிய பா.ஜ.க எம்.எல்.ஏ - சில தகவல்கள்

இது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ஜெயராம் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஆற்றல் கற்பூரத்திற்கு உள்ளது. இதுதொடர்பான ஆய்வுகள் வெளிநாட்டு ஆய்வகங்களில் நடந்துவருவதாக ட்வீட் செய்துள்ளார் தெலுகானா ஆளுநர் தமிழிசை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: