இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் நிலை என்ன - 10 முக்கிய செய்திகள்

டெல்லி மற்றும் இந்திய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமான மசூதி நிகழ்வு என்று இந்திய அரசு மற்றும் டெல்லி மாநில அரசு கூறும் தப்லிக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்களின் சுற்றுலா விசாவை ரத்து செய்வதாக இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்கள் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் விதிகளை மீறியதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

சுற்றுலா விசாவில் வந்து தப்லிக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாளை, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு, நாட்டு மக்களுக்கு ஒரு சிறிய காணொளிச் செய்தியை பகிரவுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும் இது கொரோனா வைரஸ் பரவல் குறித்த ஏதாவது செய்தியா என்று அவர் குறிப்பிடவில்லை.

இந்திய அளவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த 10 முக்கியத் தகவல்கள்

1. வியாழக்கிழமை மாலை நிலவரப்படி இந்தியாவில் இதுவரை மொத்தம் 1,965 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 151 பேர் குணமடைந்துள்ளனர். 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புதிதாக தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.

3. புதனன்று ஒரே நாளில் 437 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாடு எண்ணிக்கை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிற மாநிலங்களைக்காட்டிலும் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாகி வருகிறது.

4. நாட்டின் முக்கியமாக தொற்று பரவும் இடங்களில் ஆன்டிபாடி பரிசோதனையை மேற்கொள்ள கூறியுள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில். இதில் டெல்லி நிஜாமுதீன் பகுதியும் அடக்கம். டெல்லி நிஜாமுதீனில் நடந்த மத கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் குறைந்தது 400 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

5.இந்தியா ஆன்டிபாடி பரிசோதனைக்காக 5 லட்சம் கருவிகளை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆன்டிபாடி பரிசோதனை ரத்தப் பரிசோதனை போன்றது. இதன் சோதனை முடிவுகள் 15-30 நிமிடத்திற்குள் வந்துவிடும்.

6. கொரோனாத் தொற்று தாக்கிய மாநிலங்களில் முதல் மூன்று மாநிலங்களாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவை உள்ளன.

7. கோவிட்-19 காரணமாக நாட்டில் நிலவும் சூழலை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களையும் வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் சந்தித்தார் பிரதமர் மோதி. இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பிரதமருடன் இருந்தனர்.

8. அடுத்த சில வாரங்களில் கொரோனா தொடர்பான சோதனைகள், தொற்று இருப்பவர்களைக் கண்டறிவது, பாதிக்கப்படவர்களை தனிமைப்படுத்துவது, பாதிப்புக்குள்ளாக வாய்ப்புகள் இருப்பவர்களை தனிமைப்படுத்துவது ஆகியவற்றின் மேல் அரசின் கவனம் இருக்கும் என முதல்வர்களுடனான சந்திப்பில் கூறினார் பிரதமர் மோதி. மேலும் அவசியமான மருத்துவ பொருட்கள் மற்றும் மருந்து, மருத்துவ கருவிகள் ஆகியவை தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள் போன்றவை போதியளவு கிடைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார் பிரதமர் மோதி.

9. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் அமலாகியுள்ள முடக்கத்தை மீறுபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் யாரேனும் தவறான புகார்களை பதிவு செய்தால் அவர்களுக்கும் 2 ஆண்டு தண்டனை வழங்கப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10. மாநில முதல்வர்களுடனான பிரதமரின் சந்திப்பை அடுத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் நாளை வெள்ளிகிழமையன்று அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கோவிட் -19க்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை வலிமை படுத்துவது குறித்து காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசிக்கவுள்ளனர்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: