கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு; தமிழகத்தில் ஒரே நாளில் 67 பேருக்கு பாதிப்பு

கொரோனா வைரஸ்: இந்தியாவில் 1,071, தமிழகத்தில் 67 பேருக்கு பாதிப்பு; இணையத்தில் மது விற்பனை செய்ய கேரளா பரிசீலனை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 99 பேர் குணமடைந்துள்ளதாகவும், 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் இதுவரை 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அன்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் முடக்க நிலை வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முடிவுக்கு வரும் நிலையில், அதை நீட்டிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வரும் செய்திகள் வியப்பளிப்பதாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கௌபா தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது. “இப்போதைக்கு முடக்க நிலையை நீட்டிப்பதற்கு மத்திய அரசுக்கு திட்டமில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளதை போன்று நேபாளத்தில் அமலில் இருந்து வந்த முடக்க நிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டதை அடுத்து, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்திய - நேபாள எல்லையில் அந்த நாட்டின் குடியேற்ற பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள திடீர் முடக்க நிலையால், வேலைவாய்ப்பை இழந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இன்றி சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் அவலநிலை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியிலிருந்து அருகிலுள்ள உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு மக்கள் நடந்து செல்கின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு 1,000 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்வதாக அம்மாநில அரசு அறிவித்தது.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

எனினும், அந்த பேருந்துகளில் ஏறுவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் சமூக விலகலை பொருட்படுத்தாது முயல்வதால் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வாழும் டெல்லியை சேர்ந்தவர்களுக்கு தனது அரசு அனைத்து உதவிகளை செய்யும் என்று உறுதியளிப்பதாகவும், அதே போன்று டெல்லியில் வாழும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மக்களின் பாதுகாப்பை டெல்லி அரசு உறுதிசெய்ய வேண்டுமென்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழகத்தில் கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்துக்கு தேவையான மருத்துவ கருவிகள் உள்ளிட்ட இன்றியமையாத வசதிகளை கொண்டுசேர்க்கும் பணியில் ஏர் இந்தியா விமானங்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

“இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சூழ்நிலையை பொறுத்திருந்து கவனித்து, அதற்கேற்றவாறு முடிவெடுப்போம்” என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலையின் காரணமாக, கேரளாவில் மதுபானம் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலம் முழுவதும் பலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து மருத்துவர்களின் பரிந்துரையுடன் வருபவர்களுக்கு மதுபானம் வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இணையதளம் வாயிலாக மதுபானம் விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி மேலும் கூறுகிறது.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கட்கிழமை) துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸின் மதிப்பு 915 புள்ளிகள் குறைந்து 28,899ஆக உள்ளது.

இனி புதிய தொற்றுகள் ஏதும் ஏற்படாத பட்சத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பற்ற மாநிலம் எனும் நிலையை வரும் ஏப்ரல் 7ஆம் தெலங்கானா அடையும் என்று அந்த மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் என்ன நிலைமை?

தமிழகத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளதால், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50ல் இருந்து 67ஆக அதிகரித்துள்ளது என தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

நிலம் முழுவதும் கொரோனா அறிகுறி உள்ளவர்களின் 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது என்றும் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் இரண்டாவது கட்டத்திலிருந்து மூன்றாவது கட்டத்துக்கு செல்லாமல் தடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறன என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தற்போதுவரை கண்டுபிடிக்கப்படாததால், பொது மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ''கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தற்போதுவரை இல்லை. மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது மட்டுமே தற்போது நம்மிடம் உள்ள தடுப்பு மருந்து,'' என்றார்.வாடகை வீடுகளில் தங்கியிருப்பவர்களின் பிரச்னையை களைய ஆலோசனை செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

சுகாதார பணியாளர்கள் குறித்து பேசிய முதல்வர்,1.5கோடி முகக்கவசங்கள், மருத்துவர்களின் பயன்பாட்டிற்காக 25 லட்சம் என்95(N 95) முகக்கவசங்கள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிபுரியும்போது அணியவேண்டிய பாதுகாப்பு உடைகள் போன்றவற்றை வாங்கவுள்ளது என்றும் தெரிவித்தார். அதோடு கொரோனா பரிசோதனைக்காக 1,000 கருவிகளும் வாங்கப்படும் என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: