You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு - ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - பொருளாதார சலுகைகள் என்ன?
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24 இரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடியோ கான்ஃபரசிங் மூலமாக சில முக்கிய பொருளாதார சலுகைகளை அறிவித்தார்.
நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை சரியான திசையை நோக்கிய முதல் அடி என்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.
தனது உரையை தொடங்குவதற்கு முன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அளவுக்கு காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
''முடக்கம் அறிவித்து 36 மணி நேரம் ஆகியுள்ள நிலையில், ஏழை மக்கள் மற்றும் இந்த முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் ஒரு செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது''
- கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் மருத்துவர்கள்?
- கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும்
''பிரதம மந்திரியின் இந்த திட்டத்தில் 1,70,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. இங்கு யாரும் கையில் பணமில்லாமல், உணவில்லாமல் பசியில் துடிக்கக்கூடாது என்பதற்காக பல திட்டங்களை அறிவிக்க உள்ளோம்'' என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
''நாட்டில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ய யோஜன திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள 80 கோடி மக்கள் அனைவருக்கும் ஏற்கனவே 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்து வரும் மூன்று மாதங்களில் மேலும் கூடுதலாக 5 கிலோ வழங்கப்படும். இது தவிர ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1 கிலோ பருப்பு வகை ஒன்றும் வழங்கப்படும்'' என்றும் அவர் தெரிவித்தார்.
''விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் உடனடியாக வழங்கப்படும்.8.69 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இந்த பணம் செலுத்தப்படும். ''
''ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் என அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் இதனால் நாட்டில் 20 கோடி பெண்கள் பயன் அடைவர்.
60 வயதை கடந்தவர்கள், விதவைகள், ஏழை மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வங்கி நேரடி பண செலுத்தும் திட்டத்தின்கீழ் ஒருமுறை 1000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.'' என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
பிரதமர் மோதியின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் உள்ள பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
''பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ய யோஜன திட்டத்தின் கீழ் வரும், சுய உதவிக்குழுக்களுக்கு தீன் தயாள் கடன் திட்டத்தின்கீழ் அடமானம் எதுவும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 20 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட உள்ளது''
வருங்கால வைப்புநிதி பங்களிப்பில் இருக்கும் நிதியில் 70% பணத்தை ஊழியர்கள் எடுத்துக் கொள்ளலாம் அல்லது மூன்று மாத சம்பளத்தை எடுத்து கொள்ளலாம். இதனால், 4.8 கோடி ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
''பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ய யோஜன திட்டத்தின் கீழ், முறைப்படுத்தப்பட்ட குழுக்களில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு வருங்கால வைப்புநிதி பங்களிப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கு 24% தொகையை அரசே செலுத்தும். 100 பேருக்கு மேல் இயங்கும் நிறுவனங்களுக்கும், அந்நிறுவனங்களில் மாதம் 15,000 குறைவாக சம்பளம் பெறுபவர்களுக்கும் இது பொருந்தும்'' என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய அரசு இன்று வெளியிட்டுள்ள நிதியுதவி குறித்த அறிவிப்பு சரியான திசையை நோக்கிய முதல் அடி என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தற்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தினக்கூலி ஈட்டுபவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோருக்கு இந்தியா கடன்பட்டுள்ளது என்று தனது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.