You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் என் பி ஆர் கணக்கெடுப்பை துவங்க மாட்டோம் - தமிழக அரசு சொல்லும் காரணம் என்ன?
என்பிஆர் கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு சில விளக்கங்களைக் கேட்டிருப்பதாகவும் அவை வரும்வரை தமிழ்நாட்டில் அந்தக் கணக்கெடுப்பு துவங்காது என்றும் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், என்.பி.ஆரில் உள்ள மூன்று கேள்விகளில்தான் சிறுபான்மையினருக்கு அச்சம் ஏற்பட்டிருப்பதாகவும், அது குறித்து மத்திய அரசிடம் மாநில அரசு விளக்கம் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
"இதற்கு முன்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தபோது என்.பி.ஆர். என்பது கிடையாது. முதன் முதலாக தி.மு.க. ஆட்சியின் போதுதான் என்.பி.ஆர். எடுக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு என்.பி.ஆரோடு ஒப்பிட்டால், 2020ல் எடுக்கக்கூடிய என்.பி.ஆரில் மூன்று புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த மூன்று அம்சங்களில்தான் இஸ்லாமிய மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் அச்சத்தைப் போக்கும்வகையில் மத்திய அரசு இந்த மூன்று அம்சங்களில் திருத்தம் செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வர் கடிதம் மூலம் விளக்கம் கேட்டுள்ளார்.
இதற்கான விளக்கம் இதுவரை வரவில்லை. கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என்பதால், என்.பி.ஆர் கணக்கெடுக்கும் பணி தற்போதுவரை துவங்கப்படவில்லை. பல மாநிலங்களில் என்.பி.ஆருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மக்கள் தொகைக்கான அறிவிப்பு மட்டும்தான் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை ரத்து செய்ய மாநில அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எதிர்க்கட்சித் தலைவருக்கும் நன்றாகத் தெரியும்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் என்.பி.ஆர். குறித்து தவறான தகவலை அளிக்கிறார். ஆவணங்கள் வலியுறுதப்படுவதாக அவர் சொல்கிறார். ஆனால், என்.பி.ஆருக்கு எந்த ஆவணங்களையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு தனி நபர் அளிக்கும் தகவல்களை அப்படியே பதிவுசெய்து கொள்வார்கள். எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க அவசியமில்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பொறுத்தவரை, புதிய திட்டங்களைத் தீட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யவும்தான் எடுக்கப்படுகிறது. அதுபோலவே இந்த ஆண்டும் அந்தக் கணக்கெடுப்பு எடுக்கப்படும். என்.பி.ஆர். என்பது ஒரு மதம் சம்பந்தப்பட்டது அல்ல. எல்லா மதத்தினருக்கும் பொதுவானது.
என்.பி.ஆர். படிவம் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரிதான் அனுப்பப்படுகிறது. கடந்த முறையோடு ஒப்பிட்டால், இந்த முறை மூன்று விவரங்கள் கூடுதலாகப் பெறப்படுகிறது. தாய் மொழி, தந்தை, தாய், துணைவர் ஆகியோரின் பிறந்த தேதி, ஊர், ஆதார் எண், தொலைபேசி எண் ஆகியவைதான் அந்த மூன்று அம்சங்கள்.
2010ஆம் ஆண்டில் இருந்ததுபோலவே என்.பி.ஆர் கணக்கெடுப்பை நடத்துங்கள் என்கிறார்கள் எதிர்க்கட்சிகள். ஆனால், என்.பி.ஆர். படிவத்தில் அந்த விவரங்கள் கேட்கப்படும் நிலையில், எங்களால் பொய் சொல்ல முடியாது. அதனால் வெளிப்படையாக இதைச் சொல்கிறோம்." என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றும்படியும் என்பிஆர் கணக்கெடுப்பை பழைய முறைப்படி நடத்தும்படியும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கோரிவருகின்றன. இந்நிலையில்தான் மாநில வருவாய்த் துறை அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: