You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி வன்முறை : ‘போலீசார் சிறப்பாக செயல்பட்டனர்’ - மக்களவையில் அமித் ஷா
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் அண்மையில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்தும், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் இன்று (மார்ச் 11) மக்களவையில் சட்டப்பிரிவு-193-இன் கீழ் நடந்த விவாதத்தில் உள்துறையமைச்சர் அமித் ஷா பேசினார்.
டெல்லி வன்முறை சம்பவங்களை 36 மணிநேரத்தில் போலீசார் கட்டுப்படுத்தினர் என்று குறிப்பிட்ட அமித் ஷா, ''பிப்ரவரி 25-ஆம் தேதிக்கு பிறகு எந்த கலவரமும் நடக்கவில்லை என்று நான் பதிவு செய்கிறேன். நடந்த வன்முறை சம்பவங்களை அரசியலாக்க முயற்சிகள் நடைபெற்றன'' என்று கூறினார்.
வன்முறை சம்பவங்கள் நடைபெற்றபோது அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகை மற்றும் சந்திப்புகள் நிகழ்ந்தது பற்றி குறிப்பிட்ட அவர், ''அமெரிக்க அதிபரின் பயணத்திட்டம் முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று. எனது தொகுதியில் நடந்த நிகழ்வுகள் மற்றும் நான் அதில் கலந்துகொண்டதும் முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று. அதேவேளையில், அடுத்த நாள் டெல்லிக்கு டிரம்ப் வந்தபோது, நான் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. நாள் முழுவதும் போலீசாருடன்தான் நான் இருந்தேன். வன்முறை நடந்த பகுதிகளுக்கு செல்லுமாறு தேசிய பாதுகாப்பு படையினரை நான் கேட்டுக்கொண்டேன்'' என்று கூறினார்.
''டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்''
''நடந்த வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. வன்முறை நடைபெற்றபோது களத்தில் போலீசார் செயலாற்றி கொண்டிருந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நாட்களில் விசாரணை அறிக்கையையொன்றை அவர்கள் சமர்ப்பிப்பார்கள். மற்ற பகுதிகளுக்கு கலவரம் பரவாமல் தடுத்த, சிறப்பாக செயல்பட்ட டெல்லி போலீசாரை நான் பாராட்டுகிறேன்'' என்று அமித் ஷா மேலும் தெரிவித்தார்.
''வன்முறை சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு நான் போகாததற்கு காரணம், போலீசார் தங்கள் நேரத்தையும், ஆட்களையும் எனது பாதுகாப்புக்காக செலவிட வேண்டாம் என்று நான் எண்ணியதுதான்'' என்று அமித் ஷா குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், ''இந்த கலவரங்களை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த கலவரங்கள் முன்னரே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதாக நான் எண்ணுகிறேன். வன்முறைக்கு காரணமானவர்கள் எந்த கட்சியை, மதத்தை, சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தப்பிக்க முடியாது என்று வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நான் உறுதி கூறுகிறேன்'' என்று அமித் ஷா தெரிவித்தார்.
டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் உள்துறையமைச்சர் அமித்ஷா பேசிக் கொண்டிருந்தபோதே காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக இந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செளத்ரி, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி, சிவசேனையின் விநாயக் ராவுட், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ரிதேஷ் பாண்டே உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: