You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு: வாசனுக்கு வாய்ப்பு, தேமுதிக?
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அதிமுக கூட்டணிக் கட்சியான த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வாசன் தவிர, கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமைக் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இந்த வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
த.மா.கா.வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள அதே நேரம், அதிமுக-வின் மற்றொரு கூட்டணிக் கட்சியான தேமுதிக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கூட்டணி தர்மத்தை மதித்து அதிமுக தங்களுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தைக் கொடுக்கும் என்று தாங்கள் நம்புவதாக தேமுதிக கூறியிருந்த நிலையில் இது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 6ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி, மார்ச் 26-ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக மற்றும் திமுக அறிவித்துள்ளன.
திமுக வேட்பாளர் பட்டியலில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகிய மூவரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியா முழுவதும் 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தோடு நிறைவுக்கு வருகிறது. இதில், தமிழகத்தில், அதிமுகவை சேர்ந்த சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், கே.செல்வராஜ், எஸ்.முத்துக்கருப்பன், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா மற்றும் அதிமுக சார்பில் எம்பி-யான சிபிஎம் கட்சியின் டி.கே.ரங்கராஜன் ஆகிய ஆறு பேரின் பதவிக்காலம் முடிகிறது.
மாநிலங்களவையில், காலியாகும் 55 இடங்களில், தமிழகத்தில் தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில், அதிமுக-வுக்கும், திமுக-வுக்கும் தலா மூன்று இடங்கள் கிடைக்கும்.
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் குறித்த முழு தகவல்கள்
ஜிகே வாசன்
ஜிகே வாசன் அவரது தந்தை மூப்பனாரின் மறைவுக்கு(2002) பின்னர், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவராக பணியாற்றினார். அந்த கட்சியை, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். 2014ல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து, அந்த கட்சியில் இருந்து விலகினார்.
ஜிகே வாசன் இதுவரை இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மத்திய அமைச்சகத்தின் புள்ளிவிவரத்துறை இணை அமைச்சராகவும், 2009-2014வரை நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்,மத்திய அமைச்சரவையில் கப்பல் துறை அமைச்சராக பணியாற்றியவர். தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் அக்கட்சியினர் இருந்த வேளையில், ஜிகேவாசனுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளது
கே.பி.முனிசாமி
1980களில இருந்து அதிமுகவில் இருப்பவர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியின் செயலாளராக இருந்ததில் தொடங்கி, மாவட்ட செயலாளர், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினராகவும், இரண்டுமுறை காவேரிப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், 2011ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதே ஆட்சிக்காலத்தில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.முனிசாமி.
ஆனால் 2014ல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது, பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் கட்சியில் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிக்கும் மூன்று நபர்கள் கொண்ட குழுவில் இருந்தும் நீக்கப்பட்டவர். அந்த குழுவில் இருந்து முனுசாமி நீக்கப்பட்ட அதேசமயம், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பிதுரை
கடந்த 16வது மக்களவைவின் துணை சபாநாயகராக இருந்தவர். அந்த பதவிக்கு அனைத்து கட்சிகளும் ஆதரித்ததால் போட்டியின்றி தேர்வானார். 1985- 1989 மற்றும் 2014-2019 ஆகிய இரு காலகட்டங்களில் மக்களவை துணைத்தலைவராக இருந்த தம்பிதுரை, 2001 தேர்தலில்,பர்கூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். 2001-06 அதிமுக ஆட்சிக்காலத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அவர் இருந்தார்.
அதிமுகவில் கொள்கைப் பரப்புச் செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர். மத்தியில் பாஜக ஆட்சியின் நடவடிக்கைகளை அதிமுகவினர் பெரும்பாலும் விமர்சிப்பதில்லை என்றபோதும், தம்பிதுரை அவ்வப்போது தனது கருத்துக்களை தெரிவித்தார். மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பாஜக கொண்டுவந்த பணமதிப்பிழப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது என கடுமையாக விமர்சித்தார். அவரது விமர்சனங்களுக்கு பாஜகவினர் பலத்த கண்டனங்களை தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: