You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு
திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகிய மூவரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெற உள்ளது.
மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்களுக்கான ஆறு இடங்கள் காலியாகியுள்ளன என்ற நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடைப்படையில், திமுக கூட்டணிக்கு மூன்று இடங்களும், அதிமுக கூட்டணிக்கு மூன்று இடங்கள் கிடைக்கும்.
வரும் மார்ச் 6ம் தேதி வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யவேண்டியுள்ள நிலையில், இதுவரை அதிமுக பட்டியல் வெளியாகவில்லை. திமுக தனது மூன்று வேட்பாளர்களின் பெயர்களை தற்போது அறிவித்துள்ளது.
திமுகவின் மாநிலங்களவைப் பதவிகளில், கூட்டணி கட்சியினருக்கு இடம் கொடுக்கப்படலாம் என்று கருதப்பட்டாலும், மூன்று இடங்களையும் திமுக தனது கட்சியினருக்கே ஒதுக்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் ஒரு இடத்தை தங்களுக்கு வழங்கவேண்டும் என தேமுதிக கோரிவருகிறது.
திருச்சி சிவா, 1978ல் திமுகவின் மாணவரணி ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டவர். தற்போதுவரை மாநிலங்களவை உறுப்பினர். திருநங்கைகள் உரிமைக்காக அவர் கொண்டுவந்த தனிநபர் மசோதா பெரும் வரவேற்பைப் பெற்றது. மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். ஒருமுறை மக்களவை உறுப்பினராக இருந்தவர். இலக்கியவாதி. திமுகவின் முன்னணி பேச்சாளர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அந்தியூர் செல்வராஜ் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். மேற்கு மாவட்டங்களில் திமுகவின் பலத்தை அதிகரிக்க அந்தியூர் செல்வராஜுக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. திமுக ஆட்சியில் கைத்தறி துறை அமைச்சராக இருந்தவர். 1996ல் கலைஞரின் ஆயுள் அதிகரிக்கவேண்டி, தீ மிதித் திருவிழாவில் பங்கேற்றதால் விமர்சனத்திற்கு ஆளானார்.
திமுகவின் முக்கிய வழக்குகளை கையாண்ட வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ. குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி உடலை கடற்கரையில் அடக்கம் செய்வது தொடர்பான வழக்கில் திமுக பெற்ற வெற்றியில் பி.வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோவின் பங்கு இருந்தது. வில்சன் 2019ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார்.
பிற செய்திகள்:
- மலேசிய அரசியல்: அன்வார் கட்சியின் அதிருப்தி தலைவர் தாக்கப்பட்டார்
- மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின்: புற்றுநோய், மலாய் பாசம், மகாதீர் மீதான அன்பு - யார் இவர்?
- சிமெண்ட் இல்லை, கம்பி இல்லை: மேகாலய பழங்குடிகள் உருவாக்கிய அதிசய உயிர் பாலம்
- ரஜினிகாந்த் - இஸ்லாமிய குருமார்கள் சந்திப்பில் விவாதிக்கப்பட்டவை இவைதான்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: