You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடலுக்குள் தூக்கியெறியப்பட்ட 14 கிலோ கடத்தல் தங்கம் - நடந்தது என்ன?
கடத்திவரும்போது அதிகாரிகள் குறுக்கிட்டதால் கடலுக்குள் தூக்கியெறியப்பட்ட சுமார் 14 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை, கடலோர காவல்படை உதவியுடன் மீட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்குத் தங்கத்தை சிலர் கடத்திவருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் இலங்கையிலிருந்து மீன்பிடிப் படகின் மூலம் ராமேஸ்வரம் வருவதாகவும் தெரியவந்தது.
அந்த படகு தமிழக கடற்பகுதியை மார்ச் 3ஆம் தேதியன்று நெருங்கிய நிலையில், வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவர்கள் வந்த படகை சுற்றி வளைத்தனர். படகிலிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்டனர்.
ஆனால், அவர்களிடம் தங்கம் ஏதும் இல்லாத நிலையில், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள் தங்கத்தை கடத்திவந்ததையும் அதிகாரிகளைப் பார்த்ததும் தங்கத்தை கடலுக்குள் போட்டுவிட்டதையும் தெரிவித்தனர். ஆனால், அப்போது மாலை வேளை ஆகிவிட்டதால் விசாரணை தொடரவில்லை.
இதற்குப் பிறகு மார்ச் 4ஆம் தேதியன்று காலையில் இந்தியக் கடலோரக் காவல் படையின் உதவியுடன் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில் கடலடியில் போடப்பட்ட தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
இந்த நடவடிக்கையில் வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட, பார் வடிவிலான, 14.568 கிலோ எடையுள்ள தங்கம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு 6,30,21,168 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட முஹம்மது ஃபரூக், முஹம்மது ஆசிக் ஆகிய இருவருமே ராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர் பட்டனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: