பிரான்ஸ் கல்வெட்டு: அதிர்ச்சி தந்த 230 வருட செய்தி - பரிசு பெற்ற இருவர் மற்றும் பிற செய்திகள்

பிரான்ஸில் 230 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள செய்தியை கண்டறிந்து சொல்பவர்களுக்கான போட்டியில் இருவர் வெற்றி பெற்று சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரத்து ரூபாய் பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்கின்றனர்.

பிரான்ஸின் பிலகாஸ்டல் கிராமத்தில் உள்ள, பிரஞ்சு புரட்சிக்கு முந்தைய காலக் கல்வெட்டு ஒன்றிலிருந்த செய்தியை உள்ளூர் நிபுணர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எனவே அதற்காக போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது. அந்த போட்டியில் பங்கேற்றவர்களின் மொழிபெயர்ப்பு வேறுமாதிரியாக இருந்தாலும் அவர்கள் சொன்ன செய்தி ஒன்றுதான் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த கல்வெட்டு ஒரு மனிதனின் இறப்பை சொல்வதாக இருந்தது என அந்த போட்டியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

அந்த கல்வெட்டின் செய்தியில் 1786 மற்றும் 1787 போன்ற வருடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. படகில் வந்த ஒரு மனிதர் காற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார் என்ற அதிர்ச்சியான ஒரு செய்தியே அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று போட்டியின் வெற்றியாளர்கள் இருவருமே தெரிவித்திருந்தனர்.

நரேந்திர மோதியை புகழ்ந்த டொனால்ட் டிரம்ப்

பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் கைத்தேர்ந்த பேச்சுவார்த்தை திறன், பாலிவுட் மீதான இந்தியர்களின் ஈர்ப்பு, விவேகானந்தரின் பெருமை, இந்தியாவுடனான 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் என 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்வில் பல விஷயங்களை தனது பேச்சில் விரிவாக பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட 'நமஸ்தே டிரம்ப்' என்ற நிகழ்ச்சி இன்று (திங்கள்கிழமை) மதியம் 1 மணியளவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் திறக்கப்படவுள்ள உலகிலேயே மிகப்பெரிய மொடெரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

கடந்தாண்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்காக 'ஹவுடி மோடி' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சுமார் 50 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டு நரேந்திர மோதிக்கும், டொனால்ட் டிரம்புக்கும் உற்சாக வரவேற்பை அளித்திருந்தனர்.

ஆனால், இம்முறை ஆமதாபாத்தில் இருநாட்டு தலைவர்களையும் வரவேற்க மொடெரா மைதானத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர்.

மலேசியா: மகாதீரின் ராஜினாமாவை ஏற்றார் மாமன்னர்

மலேசியப் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகாதீர் மொஹம்மத் அறிவித்துள்ள நிலையில், அவரது ராஜிநாமாவை மலேசிய மாமன்னர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து நாட்டின் இடைக்கால பிரதமராக நீடிக்கும்படி அவர் மகாதீரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் மாமன்னர் அடுத்து ஆட்சியமைக்குமாறு யாரை அழைக்கப் போகிறார்? எனும் கேள்வி எழுந்துள்ளது.

மலேசிய நாடாளுமன்றத்தில் 222 இடங்கள் உள்ளன. ஆட்சியமைக்க 112 எம்பிக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு 102 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால் எதிர்க்கட்சிகளைக் கொண்ட தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்) கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தங்களிடம் 129 எம்பிக்கள் இருப்பதாகவும், இது குறித்து மாமன்னரைச் சந்தித்து விவரிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

டெல்லி ஜாஃபராபாத் போராட்டத்தில் வன்முறை

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்துவரும் போராட்டங்களில் உண்டான வன்முறைகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

திங்களன்று நடந்த வன்முறையில் காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் மூவர் இறந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

சாந்த்பாக், ஜாஃபராபாத் மாஜ்பூர், பஜன்புரா உள்ளிட்ட வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் திங்கள்கிழமை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

ரஜினியின் அடுத்த படத்தின் பெயர் அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்கு அண்ணாத்த எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் பெயரை, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது அறிவித்துள்ளது.

இது ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 18ஆம் தேதியன்று ராமோஜிராவ் ஃபிலிம் சிடியில் துவங்கியது. கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோரும் நடித்துள்ள இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: