You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு சரி நிகர் வாய்ப்பு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இந்திய ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர பணிவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கில் பெண்களுக்கு சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
பெண்கள் குறித்த சமூக விதிகள், உடல் சார்ந்த வரம்புகள் மற்றும் குடும்பம் சார்ந்த கடமைகள் உள்ளிட்டவற்றை காரணமாக தெரிவித்து ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ராணுவத்தில் பணிவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு வழங்க மறுக்கும் மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா அமர்வு தங்களது இந்த தீர்ப்பை மூன்று மாதங்களில் நிறைவேற்ற வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பணிவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு குறித்து கடந்த 2010ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு செய்த மேல்முறையீட்டு வழக்கில்தான் இந்த தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.
"தனது பணியை செய்வதற்குரிய உடற் தகுதியை வீரர்கள் பெற்றிருக்க வேண்டும். ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு பரிணாம செயல்முறை" என்று நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பின்போது கூறினார்.
"பெண் அதிகாரிகளுக்கு ராணுவத்தில் வாய்ப்பை மறுப்பதற்கு அவர்களின் உடலியல் வரம்புகள் மற்றும் சமூகத்தின் பார்வையை மத்திய அரசு காரணமாக முன் வைப்பது கவலைக்குரியது மட்டுமின்றி, ஏற்றுக்கொள்ளவே முடியாததும் கூட" என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
இந்திய ராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகளுக்கு மிகவும் முக்கியமான வழக்காக இது கருதப்படுவதால், தீர்ப்பு குறித்து தெரிந்துகொள்வதற்காக பல அதிகாரிகள் உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளுமே ஒரு சேர பெண் அதிகாரிகளுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் கூடியிருந்த பெண் அதிகாரிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு ஆண்களுக்கு நிகரான வாய்ப்பு வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்த கருத்துகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
"இராணுவத்தில் பெண் அதிகாரிகள் ஆண்களை விட தாழ்ந்தவர்கள் என்பதால் கட்டளை பதவிகள் அல்லது நிரந்தர சேவைக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டதன் மூலம் ஒவ்வொரு இந்திய பெண்ணையும் அரசு அவமதித்துள்ளது" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முற்போக்கான இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தான் வரவேற்பதாக பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- ஜாமியா நூலகத்தில் போலீஸ் தடியடி: அப்போது ஒரு இளைஞர் முகத்தை மூடியிருந்தது ஏன்?
- சிவபெருமானுக்கு ரயிலில் இருக்கை ஒதுக்கப்பட்டது உண்மையா?
- நிர்பயா வல்லுறவு குற்றவாளிகளுக்கு மார்ச் 3-ம் தேதி தூக்கு - டெல்லி நீதிமன்றம் ஆணை
- கொரோனா வைரஸ்: ஒரு சொகுசு கப்பல், 2 விமானங்கள், 100 மரணங்கள், 2000 ஐ- ஃபோன்கள் - இதுவரை நடந்தவை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்