You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தான் காப்பாற்றிய சிறுமிக்கு பரிசுத்தொகையை பகிர்ந்தளித்த 11 வயது மாணவி - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்பிரஸ் - சிறுமியின் நெகிழ்ச்சி செயல்
மிசோரமை சேர்ந்த 11 வயதான கரோலின் மால்சவ்ம்லுவாங்கி ஒரு வீரமான சிறுமி என்பது அவர் இந்த வருடம் வீரச் செயல் விருதை பெற்றதிலிருந்து நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் தற்போது அவரின் நல்ல உள்ளமும் வெளிப்பட்டுள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்பிரஸ் செய்தி.
தான் மீட்ட குழந்தைக்கு தனது பரிசுத் தொகையில் பாதியை வழங்கியுள்ளார் கரோலின். விருதை பெற்றுக் கொண்டு டெல்லியிலிருந்து திரும்பிய கரோலின் தன்னால் மீட்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு புதிய ஆடைகளும், வெள்ளி நகை ஒன்றையும் பரிசாக வாங்கிச் சென்றுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் கரோலின் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அவருடன் யாரென்று தெரியாத ஒரு குழந்தையும் விளையாட வந்தது. ஆனால் அடுத்த நாள் போலீஸார் அங்கு வந்து அந்த பெண் குழந்தை லுங்க்லே என்ற மாவட்டத்திலிருந்து காணாமல் போனதாக தெரிவித்துள்ளனர்.
கரோலின் அந்த குழந்தையை தேடிச் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை கடத்தியவர்கள் கரோலினை விரட்ட முயன்றபோதும் கரோலின் அந்த சிறுமியை முதுகில் தூக்கிச் சென்று ஓடிவந்துவிட்டார்.
"அந்த சிறுமியின் எளிமையான குடும்ப பின்னணியை கண்ட என் மகள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று விருப்பப்பட்டாள். எனவே விருது பெற்ற பின் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு பணம் வழங்கினோம்," என்கிறார் கரோலினின் தாய்.
தினமணி - ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ குறித்து கவலை இல்லை
காவிரிடெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தமிழகத்தில் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார் என்கிறது தினமணியின் செய்தி.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி என்பதால்தான் காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து தமிழக வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்துள்ளார்.
காவிரி உரிமையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெற்றுத் தந்தார். இன்றைய முதல்வர் அந்த மண்ணை மீட்டுத் தந்துள்ளார். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமையும் இந்த அரசையே சாரும் என அமைச்சர் தெரிவித்தார் என்கிறது அச்செய்தி.
தி இந்து - பிற முதலமைச்சர்களுக்கு அழைப்பு இல்லை
டெல்லி முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் பதவி ஏற்கும் விழாவிற்கு பிற மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய் கூறியதாக தி இந்து செய்தி தெரிவிக்கிறது.
இருப்பினும் டெல்லியில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும், பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் அதிகாரபூர்வமாக அழைப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கேஜ்ரிவால் தனது கட்சி தலைவர்களிடம் பல்வேறு அரசுத் திட்டங்களினால் பயனடையும் மக்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும், ஆம் ஆத்மியின் பணிகள் குறித்து பேசுமாறும் கேஜ்ரிவால் தெரிவித்ததாக மேலும் கூறுகிறது அச்செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: